தேசிய கல்வியியல் கல்லூரி நியமனத்தில் புறக்கணிப்பு –வவுணதீவில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யுத்த சூழலில் பாதிக்கப்பட்டு பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் கல்வி கற்ற தாங்கள் உரிய தகுதி இருந்தும் கல்வியியல் கல்லூரி நியமனத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கோரி மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பிரதேச இளைஞர் யுவதிகள் கண்டன பேரணி ஒன்றை நடாத்தியதுடன் கவன ஈர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

வவுணதீவு குறிஞ்சாமுனை சந்தியில் இருந்து கண்டன பேரணி ஆரம்பமாகி மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் வரையில் வந்ததுடன் அங்கு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2013ஆம் ஆண்டு தாங்கள் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றி சித்திபெற்று அதன் ஊடாக தேசிய கல்வியல் கல்லூரிக்கு விண்ணப்பத்தி நேர்முகப்பரீட்சைக்கும் தோற்றிய நிலையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் ஒரு மாணவர்கள் கூட தேசிய கல்வியியல் கல்லூரிக்கு தெரிவுசெய்யப்படவில்லையென மாணவர்கள் குற்றஞ்சாட்டினார்;.

இது தொடர்பில் தேசிய கல்வியியல் கல்லூரி மற்றும் கல்வி அமைச்சுக்கு சென்று தமக்கு நியாயம் வழங்குமாறு கோரியபோது மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் இருந்து தங்களுக்கு ஆசிரிய வெற்றிட தேவை தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லையென தெரிவிக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

அதேபோன்று மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு வந்து இது தொடர்பில் கோரியபோது ஆசிரிய வெற்றிட தேவை தொடர்பான தகவல்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வலயத்தினால் தெரிவிக்கப்பட்டதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

நேர்முகத்தெரிவில் தாங்கள் தெரிவுசெய்யப்பட்டபோதிலும் ஆசிரிய வெற்றிட தேவை தொடர்பான தகவல்களை காரணம் காட்டி தமக்கான ஆசிரிய மாணவர் நியமனங்கள் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுவருவதாகவும் மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தாங்கள் பின்தங்கிய பகுதிகளில் இருந்து சென்றதன் காரணமாக சில அமைச்சு அதிகாரிகள் தங்களை ஏளனமாக கதைத்தாகவும் இதன் காரணமாக தாங்கள் மிகவும் மனமுடைந்த நிலையில் இருப்பதாகவும் இதன்போது கருத்து தெரிவித்த மாணவி ஒருவர் தெரிவித்தார்.

உங்களது பகுதிக்கு சென்று விவசாயத்தினை செய்யுங்கள் ஆசிரியர் நியமனம் தேவையில்லையென தங்களை அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகவும் அந்த மாணவி தெரிவித்தார்.

தமது பிரச்சினை தொடர்பில் உரிய அதிகாரிகள் அரசியல்வாதிகள் தலையிட்டு தமக்கான தீர்வினைப்பெற்றுத்தரவேண்டும் எனவும் இங்கு மாணவர்கள் கோரிக்கையினை முன்வைத்தனர்.

இதேவேளை குறித்த பகுதிக்கு வருகைதந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் கலந்துரையாடியுள்ளதுடன் குறித்த மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வினைப்பெற்றுத்தருவதாக தெரிவித்தார்.