சமயவெறிபிடித்த அரசியல்வாதிகளையும் சமய தலைவர்களையும் புறந்தள்ளவேண்டும் -மட்டு.,அம்பாறை மறை மாவட்ட ஆயர்

சமய வெறியை தூண்டி அதில் குளிர்காய முனையும் அரசியல்வாதிகளையும் சமய தலைவர்களையும் இனங்கண்டு அவர்களை புறந்தள்ளவேண்டுமென மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை அழைப்புவிடுத்துள்ளார்.

இன்று சனிக்கிழமை மாலை சமாதானத்திற்கான இலங்கை சமயங்களின் பேரவையின் வருடாந்த ஒன்றுகூடல் பெருவிழா மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்லடி,உப்போடை சாரதா தேவி ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வானது சமாதானத்திற்கான இலங்கை சமயங்களின் பேரவையின் தலைவர் சுவாமி ஸ்ரீமத் பிரவு பிரபாணந்த ஜி மகராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை,ஜனாப் முகமது ஹனீபா முகமது புஹாரி உட்பட மதத்தலைவர்கள்,அருட்சகோதரர்கள்,பல சமயங்களின் பிரதிநிதிகள்,பல்வேறு மதங்களைக்கொண்ட பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

மதங்களுக்கிடையில் மனித நேயத்தினை கட்டியெழுப்பி வன்முறையற்ற சமூகத்தினை கட்டியெழுப்பும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வின்போது மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் மதத்தலைவர்களுக்கிடையில் நினைவுச்சின்னங்களும் பரிபாறிக்கொள்ளப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆயர்,

சமயத்தின் பெயரால் எத்தனை கொடூரங்கள் வன்முறை நிகழ்வுகள் உலகின் பல பாங்களிலும் அரங்கேறிவருகின்றன.சமய நல்லிணக்கமும் சகிப்புத்தன்மையும் கற்பூரம்போல் கரைந்துவருவது
வேதனையளிக்கின்றது.

சமய வன்முறைகளும் கலவரங்களும் தற்போது மட்டுமல்லாது வரலாற்றின் பல்வேறு காலகட்டத்திலும் நடைபெற்றுள்ளது.

சமயத்தின் சமை என்பது சமைத்தல் என்பதன் பொருள்படும். உணவுப்பொருட்களை உண்பதற்கு ஏற்றவாறு பக்குவப்படுத்துவதே சமைத்தலாகும்.அதுபோலவே மனிதர்களை நல்லநெறியில் ஒழுகச்செய்வதற்காக அவர்களை வாழ்வில் பக்குவப்படுத்துவதும் செம்மைப்படுத்துவதுமே சமயம் ஆகும்.அனைவரையும் ஒன்றிணைப்பதும் சமயங்களின்நோக்கமாக கொள்ளப்படுகின்றது.

சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் வழிபாட்டுமுறைகளையும் நுணுக்கமாக கடைப்பிடிப்பதை கடந்து மனிதனை இறைவனோடு உறவுகொள்ளச்செய்து அவர்களின் இதயங்களில் இருக்கும் தீமைகளை களைந்து இறைத்தன்மையினை அவர்களிடம் நிலைபெறச்செய்யும் ஒரு அருள்கருவியாக சமயங்க்ள விளங்கவேண்டும்.இறைவனின் மலரயை தொழுவது மட்டும் சமயம் அல்ல மனித நேயத்தினை போற்றுபவர்களாக விளங்கவேண்டும்.

உண்மையான சமயவாதிகள் உலகில் உள்ள அனைத்து மனிதர்களையும் எவ்வித வேறுபாடுகளும் இன்றி நேசிப்பவர்கள்.வள்ளலார் இராமலிங்கம் அடிகளார்,தாயுமானவர் ஆகியோர் அனைவரையும் ஒன்றிணைத்த சமயவாதிகள்.ஜேசுவும் அதனையே கூறியுள்ளார்.இஸ்லாம் என்றால் அது அமைதிமார்க்கமாகும்.அதன் அடிப்படை கோட்பாடான ஈமான் நம்பிக்கை கொண்டு மற்றவர்களுக்கு உதவும் நோக்கத்தினைக்கொண்டது.மற்றவர்களின் அமைதிக்காக பிரார்த்தனை செய்வதும் இஸ்லாத்தின் நோக்கமாக இருக்கின்றது.இவ்வாறான நிலையிலேயே நாங்கள் சமய நல்லிணகத்தை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

அனைத்து மதங்களிலும் சில பொதுமைகள் இருக்கின்றது.அதனை நாங்கள் முதன்மைப்படுத்தவேண்டும்.மனித இனத்தை சேர்ந்தவர்களே அனைவருமாகும். அனைத்து மதங்களும் அன்பையே வலிறுத்துகின்றன.மனிதநேயத்தின் அடிப்படையில் மற்றவர்களை மதிக்க மதங்கள் கற்றுக்கொடுக்கின்றன.

உண்மை,நேர்மை,சமத்துவ விழிமியங்களை சகோதரத்துவத்தினை அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன.அனைத்து மதங்களும் சமுதாய பிரச்சினைகளை தீர்ப்பதில் முனைப்புக்காட்டுகின்றன.

பல்சமயத்தின் நல்லிணக்கத்தேவையினை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.அனைத்து மதத்தினராகிய நாங்கள் இணைந்து சமய நல்லிணக்கத்தை வலிறுத்துகின்றோம். மக்களிடையே பிரிவினைகள் ஏற்படாமல் இருக்க பிளவுகளை தடுக்கவேண்டும்.

மதக்கலவரங்கள்,மோதல்கள் நிகழாமல் இருக்கவேண்டும்.சமூகத்தில் அமைதிதேவையென்றால் பிற மதத்தவர்களுடன் ஒற்றுமையுணர்வினை வளர்க்கவேண்டும்.சகிப்புத்தன்மையுடன் சமூக உணர்வுடன் வாழவேண்டும்.பிற மதங்களில் உள்ள கோட்பாடுகளை நாங்கள் அறியமுற்படவேண்டும்.

இந்த நாட்டில் நான்கு மதங்கள் உள்ளன.வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டுவதே இந்த நாட்டுக்கு இறைவன் விடுக்கும் அழைப்பாகும்.அனைவரும் எமது சகோதரர்கள்,நண்பர்கள் என்று கைகோர்க்கும் நாள் ஒன்று வரவேண்டும்.

பலர் சமய வேறுபாடுகளை ஊதி பெரிதுபடுத்தி சமயத்தின் பெயரினால் பிளவுகளை ஏற்படுத்தும் பாசிச போக்கு ஒழியவேண்டும்.இந்து-முஸ்லிம் மக்களுக்கு இடையே ஒற்றுமையினை ஏற்படுத்தியதன் காரணமாகவே மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்.சமய நல்லிணக்கத்திற்காக பாடுபட்டவரின் நிலைமை அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சமய நல்லிணக்கத்தையும் சமய ஒற்றுமையினையும் வளர்க்கவேண்டுமானால் பிற மதங்களின் கோட்பாடுகளை அறிதல் அவசியமாகும்.பிறசமயங்களை தாழ்வாகவோ,இழிவாகவோ கருதக்கூடாது.சமயங்களிடையே உரையாடலையும் உறவாடலையும் வளர்க்கவேண்டும்.அதற்காகவே சமாதானத்திற்கான இலங்கை சமயங்களின் ஒன்றியம் அதனை வலியுறுத்தி முன்னெடுத்து செல்கின்றது.

சமய விழாக்களை சமய நல்லிணக்க விழாக்களாக அனைவரும் இணைந்து கொண்டாடும்போதுதான் ஒற்றுமை தழைக்கும். ஆகவே சமய வெறியை தூண்டி அதில் குளிர்காய முனையும் அரசியல்வாதிகளையும் சமய தலைவர்களையும் இனங்கண்டு அவர்களை புறந்தள்ளவேண்டும்.