மட்டக்களப்பு அரசியல்வாதிகள் மக்களின் கஸ்டங்களை பேசுவதை விடுத்து அறிக்கை மன்னர்களாக உள்ளனர் – பிரதியமைச்சர் அமீர்அலி

மட்டக்களப்பில் சில அரசியல்வாதிகள் மக்களின் கஸ்டங்களைப்பற்றி மக்களின் வாழ்வின் அபிவிருத்தி பற்றி பேசுவதை விடுத்து அறிக்கைவிடும் மன்னர்களாகவே இருந்துவருகின்றார்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட பால்பண்ணையாளர்களின் ஒன்றுகூடலும் ஊக்குவிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

அண்மைக்காலகமாக ஊடகங்களில் ஒருவரைப்பற்றி மறுப்பு கூறுகின்ற அல்லது ஒருவரைப்பற்றி பேசுகின்ற நிகழ்வுதான் அரசியலில் இருந்துவருகின்றது.மக்களின் பிரச்சினைபற்றி மக்களின் அபிவிருத்திப ற்றி மக்களின் கஸ்டங்களைப்பற்றி அந்த கஸ்டங்களுக்குரிய நிவாரணங்களைப்பற்றி பேசுவதை விடுத்து அரசியல்வாதிகள் மோதிக்கொள்கின்ற,அறிக்கைவிடும் மன்னர்களாக இருந்துவருகின்றார்களேயன்றி வேறு எதனையும் செய்யவேண்டும் என்ற சிந்தனையில்லாமல் இந்த மாவட்டத்தில் அரசியல்வாதிகள் திக்கிதடுமாறிக்கொண்டிருப்பது வேதனையளிக்கின்றது.

எங்களுக்குள்ள அரசியல் பிரச்சினைகளை எங்களுக்குள்ள சிறியசிறிய பிரச்சினைகளை ஊதிப்பூதாகரமாக்காமல் இனமதங்களை பேசி இன்னும்இன்னும் உறவுகளுக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தாமல் அல்லது இனவாதம் பேசி எமது ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தாமல் சந்தோசமான நேரத்தினை இந்த நல்லாட்சியில் அனைவரும் எதிர்பார்த்துள்ளோம்.

அறிக்கை விடுவதில் மன்னர்களாக இருக்கவேண்டுமானால் அது கடினமாக பணிகிடையாது. வீட்டில் இருந்துகொண்டு அறிக்கைவிடும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில அரசியல்வாதிகள் அதுதான் அரசியல் என்று நினைத்துக்கொண்டுள்ளனர்.இதுதான் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் அவ்வளவு சீர்கேட்டு நிலைக்கு வந்துள்ளது.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இனதுவேச கருத்தினை தெரிவிக்கின்றார் என்றால் நீங்கள் பேசுவது பிழையென்று கூறுவதற்கு திராணியற்றவர்களாகவே உள்ளனர்.திராணியற்ற அரசியல்வாதிகளாக பலர் உள்ளது கவலைக்குரிய விடயமாகவே உள்ளது.

கடந்த காலத்தில் கிழக்கு மாகாணம் பால் உற்பத்தியில் அதிகவருமானம் ஈட்டும் மாகாணமாக இருந்துவந்தது.ஆனால் இடம்பெற்ற போராட்டங்கள் காரணமாக அனைத்தையும் இழந்து ஒடிந்துபோயுள்ள நிலையில் ஒரு நம்பிக்கை கீற்றுடன் உங்களை நான் சந்தித்துள்ளேன்.

வீண்பேச்சுகளையும் வெட்டிப்பேச்சுகளையும் பேசுவதையும் விட எதிர்காலத்தில் உங்களுக்கு பிரயோசனமாக விடயங்களைச்செய்யமுடியும் என்ற நம்பிக்கையுள்ளது.

பத்திரிகைகளில் வீணாண அறிக்கையினை விடுத்து,பிரச்சினைகளை உருவாக்கி,இனத்துவேச சிந்தனைகளை பரப்பி தமிழ்-முஸ்லிம் ஒற்றுமைக்குள் சிக்கல்நிலைகளை ஏற்படுத்தி அல்லது மூன்று இனங்களுக்குள்ளும் பிரச்சினைகளை ஏற்படுத்தி அரசியல்செய்யலாம் என யாராவது முற்பட்டால் இந்த நல்லாட்சியில் அது மக்களால் நிராகரிக்கப்படும்.

இந்த பிரதேசத்தில் உள்ளவர்கள் தமிழர்களா முஸ்லிம்களா என்பது தொடர்பில் எமக்கு பிரச்சினையில்லை.எமது மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு எதையாவது செய்யவேண்டும்.பத்திரிகையில் மட்டும் அறிக்கை வெளியீடும் ஜாம்பவனாக நான் இருக்க விரும்பவில்லை.மக்களின் பொருளாதாரம் வளர்ச்சியடையவேண்டும், பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்கவேண்டும் என்றே நான் விரும்புகின்றேன்.