பல்வேறு கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளைக்கோஸ்டி மண்டூரில் சிக்கியது

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டுவந்த மூன்று பேரடங்கிய கொள்ளை கோஸ்டியை வெல்லாவெளி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில்,சம்மாந்துறை,மத்தியமுகாம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேசங்களில் பல்வேறு கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புபட்ட குழுவினரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.பி.ரசிகசம்பத் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் மண்டூர் வெந்தகாடு பகுதியில் இவர்கள் நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.கைதுசெய்யப்பட்டவர்கள் தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 11ஆம் கொலணியை சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவர்களை களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

கோள்ளையர்களினால் கொள்ளையிடப்பட்டு நகைக்கடைகளில் விற்பனைசெய்யப்பட்ட தங்க நகைகள் உருக்கிய நிலையில் மூன்றரை பவுண் தங்கம் மீட்கப்பட்டதுடன் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் ஆயுதங்களுக்கு மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வேல்லாவெளி பிரதேசத்தில் இடம்பெறும் கொள்ளைச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் உபாலி ஜயசிங்க மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சர் சிசிர பெத்ததந்திரி ஆகியோரின் ஆலோசனையின் கீழ் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.பி.ரசிகசம்பத் வழிகாட்டலின் கீழ் உபபொலிஸ் பரிசோதகர் எதிரிசூரியவின் தலைமையில் விசேட பொலிஸ் குழுவினர் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றர்.

பொலிஸார் சிவிலுடையில் வெல்லாவெளி பிரதேசத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தபட்டுவந்த நிலையிலேயே குறித்த கொள்ளையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ச்சியான கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.பி.ரசிகசம்பத் தெரிவித்தார்.