காந்தி விளையாட்டுக்கழகத்தின் 40ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்திய கிரிக்கட் சுற்றுப்போட்டி

மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட ஆறுமுகத்தான்குடியிருப்பு காந்தி விளையாட்டுக்கழகத்தின் 40ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்திய கிரிக்கட் சுற்றுப்போட்டியில் தன்னாமுனை புனித ஜோசப் விளையாட்டுக்கழகம் இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
22 அணிகள் பங்குகொண்ட கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று மாலை ஆறுமுகத்தான்குடியிருப்பு காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

ஏட்டு ஓவர்கள் கொண்ட இறுதிப்போட்டியில் தன்னாமுனை புனித ஜோசப் விளையாட்டுக்கழகமும் மைலம்பாவெளி வெண்புறா விளையாட்டுக்கழகமும் மோதிக்கொண்டது.

இதன்போது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற வெண்புற அணியினர் களத்தெடுப்பினை தெரிவுசெய்தனர்.இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய தன்னாமுனை புனித ஜோசப் அணியினர் எட்டு ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கட்டுகளை இழந்து 64 ஓட்டங்களைப்பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மைலம்பாவெளி வெண்புறா அணியினர் எட்டு ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கட்டுகளை இழந்து 55 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டனர்.

இதனடிப்படையில் ஒன்பது ஓட்டங்களினால் தன்னாமுனை புனித ஜோசப் விளையாட்டுக்கழக வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டதுடன் இரண்டாவது இடத்தினை மைலம்பாவெளி வெண்புறா விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டதுடன் மூன்றுவாது இடத்தினை காந்தி விளையாட்டுக்கழகம் பெற்றுக்கொண்டது.

இறுதி பரிசளிப்பு நிகழ்வு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரும் அகில இலங்கை சமாதான நீதிவானும் காந்தி விளையாட்டுக் கழக போசகருமாகிய எஸ். நமசிவாயம் தலைமையில் நடைபெற்றபோது நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் கலந்துகொண்டார்.

இதன்போது இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக தன்னாமுனை புனித ஜோசப் விளையாட்டுக்கழக வீரர் ஸ்ரெபின் தெரிவுசெய்யப்பட்டதுடன் தொடராட்ட நாயகனாக மைலம்பாவெளி வெண்புறா விளையாட்டுக்கழகத்தின் வீரர் விதுசன் தெரிவுசெய்யப்பட்டார்.