மட்டக்களப்பில் மருத்துவ சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்கான பிரச்சினைக்கு தீர்வுபெற்றுக்கொடுக்கு பா.உ.நடவடிக்கை

மட்டக்களப்பு தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகம் ஊடாக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான மருத்துவச்சான்றிதழை பெற்றுக்கொள்வதற்காக எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினைப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உறுதியளித்துள்ளார்.

மட்டக்களப்பு தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் நேற்று சனிக்கிழமை விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கானவைத்திய சான்றிதழை பெறுவதற்காக பல மணித்தியாலங்கள் இரவு பகலாக காத்திருந்து வைத்தியச் சான்றிதழை பெறவேண்டிய நிலையிருந்துவருகின்றது. இதனால் அவர்கள் பல அசௌகரியங்களையும் எதிர்கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டம் தாண்டி பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான இளைஞர் யுவதிகள் தினமும் இந்த நிறுவகத்தின் முன்பகுதியில் தவமிருக்கவேண்டிய நிலையிருந்துவருகின்றது.

இது தொடர்பில் பாராமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து அங்கு சென்று நிலைமைகள் தொடர்பில் மட்டக்களப்பு தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவக உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

ஒரு மாவட்டத்திற்கு ஒரு நிறுவனமேயுள்ளது. அதிலும் ஐந்து உத்தியோகத்தர்களே கடமை புரிகின்றனர். அவர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்து வேலை புரிகின்றனர். தங்களால் இயன்றளவு உரிய சேவையை வழங்குகின்றனர்.

மேலும் அவர்கள் பாராட்டுக்குரியவர்கள் எனவும் உடனே அமைச்சு தேவைப்படும் உத்தியோகத்தரிகளை நியமித்து தரவேண்டுமெனவும் அதற்கான நடவடிக்கையினை தான் மேற்கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.