போலி லேபல் சுற்றப்பட்ட,போலியாக தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டக்களப்பில் மீட்பு

மட்டக்களப்பு சுகாதார பிரிவுக்குட்பட்ட கல்லடி பொதுச்சுகாதார பிரிவில் போலியான லேபல் இடப்பட்ட மற்றும் போலி தேன் போத்தல்களை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளதுடன் மருத்துவச்சான்றிதழ் இன்றியும் அனுமதி பெறப்படாத நிலையிலும் உணவு தயாரித்து விற்பனை செய்த நடமாடும் உணவு வாகனத்தினையும் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று புதன்கிழமை மாலை கல்லடிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போதே இவை கைப்பற்றப்பட்டதாக கல்லடி பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் க.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட போலி லேபல் பொருத்தப்பட்ட பெருமளவான சீவல் பக்கட்டுகள் கைப்பற்றப்பட்டன.இதன்போது பொருட்களை இறக்கிக்கொண்டிருக்கும்போது சீவல் விற்பனையாளர் தப்பிச்சென்றுள்ளதாகவும் அவருக்கு எதிராக இன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

இதேபோன்று போலியான தேன் விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒருவரிடம் இருந்து பெருமளான போலி தேன் போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இதேவேளை நேற்று புதன்கிழமை மாலை கல்லடிப்பகுதியில் வாகனத்தில் உணவு தயாரிப்பவருக்கு மருத்துவச்சான்றிதழ் இல்லாத நிலையிலும் உணவு விற்பனைக்கான அனுமதிச்சான்றிதழ் இல்லாத நிலையிலும் உணவு விற்பனை வாகனம் ஒன்றை கைப்பற்றியுள்ளதுடன் அவற்றில் இருந்த உணவுப்பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவர்களுக்கு எதிராக இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.