தமிழர்களின் கிராமிய கலைகளை வளர்க்கும் வகையில் கொக்கட்டிச்சோலையில் நடைபெற்ற நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமப்புறங்களில் காணப்படும் பாரம்பரிய கலைகளை சிறுவர்கள் மூலமாக வெளிக்கொணரும் வகையிலான நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.


கடந்த காலத்தில் தமிழர்களின் பாரம்பரியங்கள் அழிக்கப்பட்டு தமிழர்களின் கலைகள் தொடர்பில் எதிர்கால சமூகம் அறிந்திராத நிலையே இருந்துவருகின்றது.

உலக தரிசன சிறுவர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வேல்ட் விசனின் அனுசரணையுடன் “சின்னஞ்சிறார்களின் வண்ணக்கலைக்கோலம்” என்னும் தலைப்பில் இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது.

உலக தரிசன சிறுவர் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் இ.குகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் செ.பிரபாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக வேல்;ட் விசனின் பட்டிப்பளை பிரதேச முகாமையாளர் இ.மைக்கல்,பட்டிப்பளை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அ.சண்முகநாதன்,கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் கே.வரதராஜன்,வேள்ட் விசன் திட்ட இணைப்பாளர் ஆர்.அமுதராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அழிவடைந்துவரும் பாரம்பரிய கலைகளை சிறுவர்கள் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு கொண்டுசெல்லும் வகையில் இந்த நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் 25 முன்பள்ளி மாணவர்களின் நிகழ்வுகள் நடைபெற்றதுடன் நிகழ்வுகளில் பெரும்பாலானவை கிராமிய கலைகளை அடிப்படையாகக்கொண்டதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.