மட்டக்களப்பில் முதன்முறையாக தேசிய தமிழ் மொழித்தின நிகழ்வு -இன்று கோலாகலமாக ஆரம்பம்

அகில இலங்கை தேசிய தமிழ் மொழித்தின போட்டிகள் முதன்முறையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு நடாத்தப்படுகின்றது.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி,உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் இந்த நிகழ்வு இன்று காலை ஆரம்பமானது.

இதனையொட்டி இன்று காலை கல்லடி இராமகிருஸ்ண மிசனில் இருந்து கலாசார ஊர்வலம் ஆரம்பமானது.

இந்த ஊர்வலமானது சாரதா முன்பள்ளி வளாகத்தில் உள்ள சுவாமி விபுலானந்தரின் சமாதி வரை சென்றதுடன் அங்கு சமாதிக்கு மாலை அணிவிக்கப்பட்டு வணக்க நிகழ்வு நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து சிவானந்தா தேசிய பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பமானது.

கல்வி அமைச்சும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் கல்வித்திணைக்களமும் இணைந்து இந்த போட்டிகளை நடாத்துகின்றது.

கல்வி அமைச்சின் தேசிய மொழிகள் மானுடவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.எம்.ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் தமிழ்பாடசாலைகள் அபிவிருத்திக்கான பணிப்பாளர் எஸ்.முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் மத்திய கல்வி அமைச்சின் உதவி கல்விப்பணிப்பாளர் திருமதி ஜி.சடகோபன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு கல்வி வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரனினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

அகில இலங்கை தேசிய தமிழ் மொழித்தின போட்டிகள் இன்று சனிக்கிழமையும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளதுடன் இந்த போட்டிகளில் இலங்கையில உள்ள ஒன்பது மாவட்டங்களில் இருந்து 800 மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது நடனம், இசை, நாட்டார் பாடல், விவாதம், நாட்டிய நாடகம். பாடல், தமிழ் அறிவு, தமிழ் ஓதல் மற்றும் முஸ்லிம் நிகழ்ச்சிகள் உட்பட 24 வகையான போட்டிகள் மேற்படி இரு பாடசாலைகளிலும் நடைபெறவுள்ளது.