49வது உலக தொலைத்தொடர்பு தினம் மட்டக்களப்பு மறை மாவட்டத்தினால் அனுஸ்டிப்பு

49வது உலக தொடலைத்தொடர்புகள் தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.


இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மறை மாவட்ட சமூக தொடர்பு நிலையம் நடாத்திய நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

குடும்பமும் தொடர்பாடலும் என்னும் தலைப்பில் இந்த ஆண்டு நடாத்தப்படும் இந்த உலக தொலைத்தொடர்பு தின நிகழ்வினை சமூக தொடர்பு நிலையத்தின் இயக்குனர் பி.ரமேஷ் கிறிஸ்டி தலைமையேற்று நடாத்தினார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு,அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களின் பங்குத்தந்தையினர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின்போது மறைக்கல்வி மற்றும் நாடகம்,கலை,இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புமிக்க சேவையாற்றிய அருட்தந்தை தேவதாசன் மற்றும் கல்வி மற்றும் கலை,கூத்து ஆகியவற்றுக்கு அரும்பணியாற்றிய முத்த கலைஞர் தோமாஸ் சிங்கராஜா ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளியான குறும்படங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டியில் இந்த ஆண்டுக்கான சிறந்த குறும்படமாக மனிதம் தெரிவுசெய்யப்பட்டு அதற்கான விருது வழங்கப்பட்டது.