காத்தான்குடியில் வீதி பாதுகாப்பு நிகழ்ச்சி திட்டம் பாடசாலைகளில் அமுல்படுத்தும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் விபத்துக்களை தடுக்கும் வகையில் பொலிஸ் நிலையங்களினால் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.


அண்மைக்காலமாக நாடெங்கிலும் இடம்பெற்றுவரும் விபத்துகளில் அதிகளவில் மாணவர்களே பாதிக்கப்பட்டுவருவதன் காரணமாக பாடசாலைகளில் விசேட வழிப்புணர்வு நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

தேசிய வீதி பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு இந்த நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

இதன்கீழ் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள பாடசாலைகளில் விசேட விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இன்று காலை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் காத்தான்குடி அல்அமீன் வித்தியாலய மாணவர்களுக்கான வீதி போக்குவரத்து விதி தொடர்பில் அறிவுறுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

காத்தான்குடி போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி திலங்க ஜயலால் துசாரவின் தலைமையில் நடைபெற்றதுடன் இதன்போது மாணவர்களுக்கு வீதி போக்குவரத்து தொடர்பான செய்முறைப்பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் என்பன மேற்கொள்ளப்பட்டன.