தமிழ்ச்சமூகத்தில் ஊடகக்கல்வி : வாய்ப்புக்களும் சவால்களும் ‘தராக்கி டி. சிவராம்’ நினைவேந்தல் நினைவுப் பேருரை

கலாநிதி சி. ரகுராம் - சிரேஷ்ட விரிவுரையாளர் - தொடர்பாடல் கற்கைகள், திருகோணமலை வளாகம், கிழக்குப் பல்கலைக்கழகம்
மானுடத்தின் அடிப்படைத் தேவைகளின் பட்டியலில் உணவு, உடையுள், இருப்பிடம் ஆகியவற்றுக்கான முக்கியத்துவத்துடன் தொடர்பாடலும் இடம்பெறுவது தவிர்க்கமுடியாததாகிவிட்டது. மேற்குறித்த அடிப்படைத் தேவைகளின் வெளிப்பாடும், நிறைவேற்றமும் தொடர்பாடலின்வழியேதான் உரிய இலக்குகளைச் சென்றடையும் என்பதே இதற்கான காரணமாகும்.

இந்தவகையில், தொடர்பாடல் தனிமனிதனினதும் சமூகத்தினதும் தேவையைக் கருத்திற்கொள்ளும் அவசியம் வலுத்திருப்பதுடன், அவை இன்று ஆய்வுக்குரிய களங்களாகவும் மாறியிருக்கின்றன; அதன் தொடர்ச்சியாக, ஊடகக்கல்வி பற்றிய புதிய விழிப்புணர்வையும் உலகெங்கும் இன்று பரவலாக அவதானிக்க முடிகிறது.

இவ்வாறான  நிலையில், இலங்கைச் தமிழ்ச் சமூகத்தில் ஊடகங்களை அறிதல், ஊடகத் திறன்களை வளர்த்துக்கொள்ளல், ஊடகங்களைக் கற்றல், ஊடகங்களை அவற்றின் செல்வாக்கை, பாதிப்புக்களை விமர்சனரீதியில் ஆய்வு செய்தல் ஆகியன இன்று காலத்தின் தேவையாகியுள்ளன.

இவற்றின் ஒரு பேறாக, தமிழ்ச்சமூகத்தில் ஊடகக்கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புக்களையும் அதில் எதிர்நோக்கப்படும் சவால்களையும் இங்கு கவனத்திற்கொள்ளலாம்.

இதில் முதலில் குறிப்பிடப்படவேண்டிய விடயம் - ஊடகக்கல்வி எவ்வகையான புலத்தினூடாக வழங்கப்படவேண்டும் என்பதாகும். இங்கு புலம் என்பது - முறைசார்ந்து அல்லது முறைசாராதது என இருவகைகளில் அமையமுடியும்.

முறைசார்ந்த ஊடகக்கல்வி, நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்பொன்றின் மூலம், அதன் கட்டமைப்பிற்கேற்ற வகையில் குறிக்கப்பட்ட இலக்குகளுடன் வழங்கப்படக் கூடியதாகும். அதேவேளை, முறைசாராத ஊடகக்கல்வியானது தேவைகளைப் பொறுத்தும், வளங்களைப் பொறுத்தும் வரையறுத்த பரப்பினுள் வழங்கப்படக்கூடிய ஒன்றாக அமைகிறது. இலங்கைத் தீவில் ஊடகக்கல்வியைப் பொறுத்தளவில், இன்று பரவலாக மிகப்பெரும்பான்மையான அளவில்  முறைசாராத அளவிலேயே ஊடகக்கல்வி வழங்கப்படுகிறது. குறுகிய காலப் பயிற்சிகள், வரையறுத்த விடயதானங்கள், அளவில் குறைந்த பங்குபற்றுநர்கள், நீண்ட கால நோக்குகள் காணப்படாமை, தொடர்ச்சித்தன்மை இன்மை ஆகிய பண்புகள் இவற்றில் இனங்காணப்படுகின்றன.

ஆனால், இவற்றைப் பலவீனமான அம்சங்கள் என்று புறந்தள்ளவும் முடியாது என்பது இங்கு கவனத்திற்குரியதாகும். இங்கு பிரச்சினை என்னவெனில், இத்தகைய முறைசாராத ஊடகக்கல்வி யாருக்குத் தேவைப்படுகிறது, அவற்றின் உண்மையான இலக்குகள் எவை என்பது பற்றிய தெளிவான கொள்கையும் அவற்றின் அடிப்படையிலான திட்டமிடலும் இல்லாமலிருப்பதே ஆகும்.

முதலில் - ஊடகக்கல்வி, மாணவர்கள் முதற்கொண்டு பொதுமக்கள் வரையில் அவர்கள் அவர்களது தேவைகளுக்கேற்றவாறு வழங்கப்படும் நிலை உருவாகவேண்டும். அவ்வாறிருந்தால் மாத்திரமே ஊடக அறிவு என்பது அதன் இலக்கை எட்டுவதோடு, சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கும் பயன்தருவதாக அமைந்துகொள்ளமுடியும்.

ஊடகக்கல்வி வழங்கப்படுதல் அல்லது தொடர்பாடல் திறன்கள் பகிரப்படுதல் என்பது ஐந்து வெவ்வேறு நிலைகளில் இடம்பெறமுடியும். 

முதலாவதாக, பொதுசன மட்டத்தில் ஊடகங்களின் செயற்பாடுகளைத் தகவல் மட்டத்தில் அல்லது அடிப்படைப் பயிற்சிகள் மட்டத்தில் வழங்குதல். இது ஊடகங்கள் சார்ந்து பொதுப்புரிந்துணர்வை மக்களிடம் எற்படுத்துவதோடு, ஊடகங்கள் மக்களின் வாழ்வியலில் செலுத்தவல்ல அநாவசியச் செல்வாக்குகளைக் கட்டுடைத்து, ஊடகப் பண்பாட்டின் நேர் இயல்புகள்பால் அதிகக் கவனக்குவிப்பை சமூகமட்டத்தில் உருவாக்க உதவும்.

அத்தோடு, ஆளுமை விருத்திக்கானதாக தொடர்பாடல் மற்றும் ஊடகத்திறன்களை வளர்த்தெடுத்தல் மற்றும் அவற்றுக்கான பயிற்சிகளை வழங்குதலும் இந்த நிலையில் உள்ளடக்கப்படும். இன்றைய போட்டிகள் நிறைந்த உலகில் வேலைவாய்ப்புக்களைத் தருவதிலும், பதவியுயர்வுகளை உறுதிப்படுத்துவதிலும் தொடர்பாடல் திறன்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. குழுக்களாக இணைந்து பணியாற்றுதல், தகவல்களைச் சரிவரப் பகிர்ந்துகொள்ளல், தலைமைத்துவப் பண்பு, பிரச்சினைகளை ஆரோக்கியமாக அணுகுதல், அவற்றுக்கான தீர்வுகளைக் காணுதல், அவற்றை முன்வைத்தல் எனப் பல நிலைகளிலும் தொடர்பாடல் திறன்களின் பிரயோகம் வேலைவாய்ப்பு உலகில் அதிகம் எதிர்பார்க்கப்படுவது இங்கு கவனிக்கத்தக்கது.

இரண்டாவது, தமிழ்ச்சமூக அறிவுப்புலமாக அமையக்கூடிய பல்கலைக்கழகங்களில் ஊடகக்கல்விக்கான வாய்ப்புக்களை இன்னமும் ஆக்கபூர்வமானதாக்கிக் கொள்ளும் வாய்ப்புக்களைப் பரிசீலித்தலும் அவற்றுக்கான சவால்களை இனங்காணலும்.

மூன்றாவது, பாடசாலைகள் மட்டத்தில், க.பொ.த. சாதாரண தரத்திலும் உயர்தரத்திலும் 'தொடர்பாடலும் ஊடகக்கற்கைகளும்' பாடத்தினை விருப்பத் தேர்வாக கொள்ளும் மாணவர்களுக்குரிய கற்கை வாய்ப்புக்களை உறுதிப்படுத்தல், அவர்களது உயர்கல்வி தொடர்பறா வண்ணம், பல்கலைக்கழகத்திலும் பட்டப்படிப்புக்களுக்கான வாய்ப்புக்களை வழங்குதலும், ஊடகத் தொழிற்துறையில் அவர்களுக்கான பிரவேசங்களை விரிவாக்குதலும்.

நான்காவது, தொழில்சார் ஊடகவியலாளர்களுக்கான கல்வியும் பயிற்சிகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இன்று முழு நேரப்பணியாளர்களாக ஊடகத்துறையில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் காலத்துக்காலம் , தமது விருப்பத்திற்கேற்ற வகையிலும், புலமைக்கேற்ற வழியிலும் தகுந்த விசேடதுறைகளில், ஊடகத்துறையின் பூகோளநிலைப் போக்கிற்கு ஏற்றாற்போல பயிற்சிகள் பெற்று தமது தொழில்சார் நிபுணத்துவத்தைப் புதுப்பித்துக்கொள்வது அத்தியாவசியமானது. அதற்கான பயிற்சிகள் காலக்கிரமங்களில் வழங்கப்பெறுதல் வேண்டும். இங்கு, தனியே தொழில்சார் அனுபவங்கள் மாத்திரமல்லாது, முறையான ஊடகக்கற்கைகளுக்குள், குறிப்பாக பல்கலைக்கழகக் கல்விச்சட்டகத்திற்குள் தொழிலாற்றும் ஊடகவியலாளர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்களாக இருந்தால், அது அவர்களை மாத்திரம் முன்னேற்றாது, பல்கலைக்கழகங்களின் ஊடகக்கல்விப்புலத்திற்கும் புலமைச்சொத்தாக அமையும்.
ஐந்தாவது, தொடர்பாடல் மற்றும் ஊடகக்கற்கைகளை சீரிய ஆய்வுப்புலமாக, பட்ட மேற்படிப்புகளிலும் ஆய்வுப்பட்ட நிலைகளிலும் வளர்ப்பதன்மூலம் - ஊடகங்கள் சார்ந்து முன்வைக்கப்படும் விமர்சன ரீதியான பார்வைகளை கல்விசார் ஆய்வுகளினூடாக அணுகவும், அதன்வழியே ஆக்கபூர்வமான ஊடகப்பண்பாட்டை உருவாக்கவும் வாய்ப்புக்கள் உருவாகும்.

இந்த நிலையில், ஊடகக்கல்வியும் தொடர்பாடலும் பிரயோக நிலையில் சாதிக்கக்கூடமானவற்றையும் உள்ளடக்குவதோடு, வெவ்வேறு துறைகள் சார்ந்தும் இவை ஒத்திசையக்கூடிய செயற்பாடுகளை அடையாளங் காண்பதும் கவனத்திற்கொள்ளப்படும்.

இந்த ஐந்து நிலை முயற்சிகளிலிலும் - முதல் நிலையில் பொதுசன இரசனைக்கான தகுந்த ஊடகக்கல்வியை அல்லது ஊடக விழிப்புணர்வைக் கட்டமைத்தல் என்பதும் ஆளுமைத் திறன்களை வளர்ப்பதற்கான ஊடகக்கல்விப் பயன்பாடு என்பதும் அதிக சவால்களுக்குரிய நிலைக்களன்களாக இருக்கப்போவதில்லை என்பதாலும் அந்தப் பணிகள் பல்வேறு தரப்புக்களாலும் ஏலவே தமிழ்ச்சமூகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாலும் அவை குறித்த விவாதங்களை இச்சந்தர்ப்பத்தில் விடுத்து -  இதவரை அதிகம் ஆராயப்படாத அதிகம் பேசப்படவேண்டிய அடுத்த நிலை ஊடகக்கல்வி  வாய்ப்புக்கள் மற்றும் சவால்களை இங்கு எடுத்துச் சொல்ல விழையப்படுகின்றது.

பல்கலைக்கழகங்களில் ஊடகக்கல்வி வடக்கு - கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களில் ஊடக்கல்வி என்பது,  ஆரம்ப காலங்களில் - கலைப்பீடங்களின் அனுசரணையில், அதிகமாக மொழிசார் பாடத்துறைகளைப் பயிலும் மாணவர்களில் ஆக்கத்திறனையும் எழுத்தாற்றலையும் வளர்க்க உதவும் வகையிலேயே இலக்கிய நோக்குடன் வழங்கப்பட்டது. ஆனாலும், ஊடக அனுபவங்களைக் கொண்டிருந்த கல்வியாளர்கள் சிலரது முயற்சிகளும் அவர்களது அரசியல் பின்புலமும் ஊடகக்கல்விக்கு ஒரு விமர்சனரீதியான, கனதியான பார்வைகளையும் வழங்கியிருந்ததையும் இங்கு மறுக்கமுடியாது. ஆனாலும், ஒரு தொழில்சார் ஊடகத்துறைக்குள் புகுவதற்வான அனுமதிச் சீட்டாக அவை அமைந்திருக்கவில்லை என்பது இங்கு நோக்கற்பாலது.

துறைசார்ந்த ஊடக்கல்வியை முதலில் சான்றிதழ் அளவிலேனும் அறிமுகப்படுத்திய சிறப்பு யாழ். பல்கலைக்கழகத்திற்கு உண்டு. 90களின் ஆரம்பத்தில் - புறநிலைப் படிப்புக்கள் அலகு வழியாக யாழ். பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்ட இதழியல் கற்கையும், புகைப்படக் கற்கையும் பல்கலைக்கழகக் கல்வியாளர்கள் மாத்திரமல்லாது, தொழில்சார் ஊடகவியலாளர்களின் பங்களிப்புடனும் நடாத்தப்பட்டது,

வடபுலத்தில் தகுந்த ஊடகக்கல்வி முயற்சிக்கான ஒரு முன்னுதாரணமாகக் கருதப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த அனைத்து நாளிதழ்களினதும் ஆசிரியர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், செய்தியாளர்கள், புகைப்பட இதழியலாளர்கள், அச்சு மற்றும் விநியோக முகாமையாளர்கள் எனப் பலரும் அதிதி விரிவுரைகள் நிகழ்த்தவும், அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் அழைக்கப்பட்டனர். அதன்பின்னர் இதுபோன்ற சூழல் இன்றுவரை வட- கிழக்குப் பல்கலைக்கழகங்களில் உருவாகாதது துரதிர்ஷ்டவசமானதே.

ஊடகங்கள் சார்ந்த விமர்சன நோக்குடனான பார்வைவரை விரிவுபடுத்தப்படாததும், பங்கேற்பாளர்களுக்கு தொடர்ச்சியான கல்வி வாய்ப்புக்கள் பின்னர் கிடைக்கப்பெறாததும், 'பல்கலைக்கழக அங்கீகாரம்' என்ற தகுதிக்குள் அல்லது பட்டப்படிப்புக்கள் கொண்டுள்ள தகுதி நிலையில் இத்தகைய புறநிலைப்படிப்புக்கள் சான்றிதழ்கள் இடம்பெறாததும் மேற்குறித்த முயற்சிக்கு தளர்வைத் தந்தாலும் கூட, ஒரு முன்னுதாரணம் என்ற அளவில் இக்கற்கைநெறிக்குள்ள முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடமுடியாது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அண்மைக்காலமாக புறநிலைப்படிப்புக்கள் சார்ந்து இதழியல் கற்கைகள் சான்றிதழ் அளவில் வழங்கப்பட்டாலும், இங்கும் தொழில்சார் ஊடகவியலாளர்களின் பங்கேற்பு குறிப்பிடத்தக்க  அளவில் கிடைக்கப்பெறாததும் தொடர் இலக்குகளை வரிந்துகொள்வதில் காணப்படும் குறைபாடுகளும்  - தொழில்சார்தர நிலைக்கு பங்கேற்பாளர்களை இட்டுச்செல்வதில் தடைகளாக உள்ளன.

இங்கு முதலில்  குறிப்பிட்ட  'பல்கலைக்கழக அங்கீகாரம்' என்பது ஒரு மாயை எனச் சில தரப்பினர் வாதிட்டாலும்கூட, அந்த அங்கீகாரத்தைப் பெறமுடியாத கல்வியைப் பல்கலைக்கழகங்களே வழங்க முயல்வது முரண்பாட்டுச் சிக்கல்களையும் நம்பிக்கையீனத்தையும் தோற்றுவிக்கக்கூடும். சாதாரண பல்கலைக்கழகத் தெரிவு முறைகளுக்குள் உட்படாத வகையில் இடம்பெறும் பங்கேற்பாளர்களின் தெரிவானது வலுவானதாகவும் வெளிப்படைத்தன்மையும் கொண்டிருப்பதோடு, தெரிவாகும் மாணவர்கள் குறிப்பாக தொழிலாற்றும் ஊடகவியலாளர்கள் கற்கைநெறி முடிவினில் பெறக்கூடிய சான்றிதழ்களுக்குரிய செல்லுபடித்தன்மை அல்லது ஊடகத் தொழில் களத்தில் அவற்றுக்கான அங்கீகாரம் என்பதும் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

அதேவேளை, இவ்வாறான இதழியல் பட்டயப்படிப்பு வழங்கப்படுகையில், அந்தப் பங்கேற்பாளர்களுக்கான தொழில்சார் வாய்ப்புக்களைக் கருத்திற்கொள்ளும்போது - தேவைக்கும் விநியோகத்திற்குமான சமநிலை குறித்து சீரிய கவனம் செலுத்தப்படவேண்டியது அவசியமானதாகும். அவ்வாறு தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறுகையிலும் ஒப்பீட்டளவில் மிகக்குறைந்த வேதனத்தையே பெறக்கூடிய,  நீடித்த தன்மையுடனான வாழ்வுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தாத பணிகளே வெளிவரும் பட்டயப்படிப்பாளர்களுக்குக் காத்திருப்பதையும், இது காலவோட்டத்தில் ஊடகம்சார் சான்றிதழ் அல்லது பட்டயப்படிப்புக்கள் மீதான ஆர்வமின்மையையும் சோர்வையும் உருவாக்கும் என்பதையும் இங்கு கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது. 

அதேவேளை, இப்பட்டயப்படிப்பை அடிப்படைத் தகுதியாகக் கொண்டு ஊடகத்துறையில் இளமாணி போன்ற உயர்கல்வி வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில் பல்கலைக்கழகங்கள் முயற்சிகளை மேற்கொள்ள இடமுண்டு. அவ்வாறான திட்டமிடல், பல்கலைக்கழக கல்விவாய்ப்பைப் பெற்றிராத, பெரும்பாலான தொழிலாற்றும் ஊடகவியலாளர்களுக்கு அல்லது ஊடகம்சார் பட்டப்படிப்புக்களை மேற்கொள்ளாது வேறுதுறைசார் பட்டங்களைக் கொண்டிருக்கக்கூடிய தொழிலாற்றும் ஊடகவியலாளர்களுக்கு ஊடகக்கல்வியில் முறைசார் கல்வித்தகைமையைப் பெறச் சந்தர்ப்பத்தை வழங்கும். உதாரணத்திற்கு, தாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ள ஊடகக் கற்கைகள் பட்டப்படிப்பில், தொழிலாற்றும் ஊடகவியலாளர்கள் பட்டயப்படிப்பையும், பல்கலைக்கழகத் தெரிவுக்கான அடிப்படைத் தகைமையையும், பல்கலைக்கழக பேரவை வகுக்கக்கூடிய இன்னபிற தகுதிப்பாடுகளையும் கொண்டிருக்கும் பட்சத்தில் அவர்களையும் இணைத்துக்கொள்ள  யாழ். பல்கலைக்கழகம் இடந்தருமாக இருந்தால், அது யாழ். பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையம் (ஆநனயை சுநளடிரசஉநள யனே கூசயiniபே ஊநவேசந - ஆசுகூஊ) வழங்கவல்ல பட்டயப்படிப்பின் பெறுமதியை அதிகரிப்பதோடு, அப்பட்டயப்படிப்பின் பின்னரான உயர்கல்வி வாய்ப்புக்களைத் தரக்கூடிய தொடர்ச்சித்தன்மையை வழங்கலாம். இதுபோன்று, தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தான் வழங்கும் இதழியல் பட்டயப்படிப்பின் பின்னரான தொடர் கல்வி முயற்சிகளுக்கு வாய்ப்பை வழங்க முடியும். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம், தனது தொடர்பாடல் கற்கைகள் பட்டப்படிப்பில் குறித்த சில இடங்களை தொழிலாற்றும் ஊடகவியலாளர்களுக்கு வழங்க பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிடம் பரிந்துரைக்கமுடியும்.

ஏற்கனவே, இலங்கையில் குறிப்பிடத்தக்க பல்கலைக்கழகங்களில் விவசாயத்துறையில் இவ்வாறான அனுமதி முறைமை நடைமுறையிலுள்ளபோது ஊடகக்கற்கைகளிலும் இதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய இடமுண்டு என்றே கூறலாம்.
அதேவேளை, உள்வாரி மாணவர்களைப் பொறுத்தளவில், பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் ஊடகக்கல்வி வாய்ப்புக்கள், தொழில்சார் ஊடகவியலாளர்களுடன் அல்லது தொழில்சார் ஊடகத்துறையுடன் இணைந்து பணியாற்றவல்ல வெளியையும் தருவதாக அமைந்தால் - அது, மாணவர்களுக்கு ஊடகக்கல்வி மீதான அதிக ஆர்வத்தையும் தமது கற்கைகளின் பின்னராக தொழில் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அதிகம் வளர்த்துக் கொள்ளவும், தொழில்சார் ஊடகவியலின் போக்குகளுக்கேற்ப அல்லது அங்குள்ள தொழிற்சந்தையின் தெரிவுகளுக்கு அமைவாக - தமது கற்கையினைத் தீர்மானித்துக் கொள்ளவும், தொடரவும் சந்தர்ப்பங்களைத் தரக்கூடியதாக இருக்கும்.

இந்தவகையில், வட-கிழக்கிலுள்ள பல்கலைக்கழகங்களில் யாழ். பல்கலைக்கழகமும், அதன்கீழ் இயங்கும் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையமும் (ஆநனயை சுநளடிரசஉநள யனே கூசயiniபே ஊநவேசந - ஆசுகூஊ) இவ்வாறான ஒன்றுக்கொன்று நன்மையும் அனுசரணையும் தரக்கூடிய நல்வாய்ப்பைக் கொண்டிருக்கின்றன. யாழ். பல்கலைக்கழகத்திற்கும் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்திற்குமான செயற்பாட்டுப் பிணைப்பு வலுவானதாகக் கொள்ளப்பட்டால், இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் பல்கலைசார் ஊடகக்கல்விப் புலத்திற்கும், தொழில்சார் ஊடகத்துறைக்குமான உதாரணம் காட்டக்கூடிய மையச் செயற்பாட்டு அங்கமாக அது விருத்தி அடையும் என்பது மறுக்கப்படமுடியாதது. 

தமிழ்ச்சமூகத்தில் பல்கலைக்கழக மட்டத்திலான மற்றுமொரு ஊடகக்கல்வி வாய்ப்பு என எடுத்துக்கொண்டால்,  கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் வழங்கப்படும் தொடர்பாடல் கற்கைகள் பட்டப்படிப்பு - ஊடகக் கல்வியின் பரந்த பரிமாணங்களை உள்ளடக்கியிருப்பதும், ஆங்கிலமொழிவழியில் கற்கைகள் அமைந்திருப்பதும் கவனத்திற்கொள்ளத்தக்கது. வட- கிழக்கிலுள்ள ஏனைய இரு பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடுகையில் - ஊடகக்கல்விக்கான பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள், அளவில் சிறியதாயினும் நிரந்தர விரிவுரையாளர் ஆளணி ஆகியவற்றையும் அது கொண்டுள்ளது. 

அதேவேளை, பல்கலைக்கழக மட்டத்திலான தமிழ்ச்சமூகம் சார்ந்த ஊடகக்கல்விக்கான சவால்கள் என நோக்குமிடத்து, இங்கு பட்டப்படிப்பிற்கான அனுமதியைப் பெறும் மாணவர்களில் தமிழ் பேசும் மாணவர்கள் மிகக் குறைவான சத வீதத்தினராக உள்ளமை பிரதான விடயமாகும். அந்தளவில், தீவடங்கிய  தேர்ச்சி மட்டத்தினூடாகத் தெரிவாகக்கூடிய இக்கற்கைநெறிக்கு, தமிழ் பேசும் மாணவர்கள் போதியளவில் விண்ணப்பிக்காமை இங்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகவுள்ளது. 

2010 / 11 ம் கல்வியாண்டில்  78 சதவீத சிங்கள மாணவர்களும் (38 / மொத்த இடம் : 49), 22 சதவீத தமிழ்பேசும் (07 தமிழ் மற்றும் 04 இஸ்லாமிய மாணவர்கள்) மாணவர்களும்
2011 / 12 ம் கல்வியாண்டில்  65 சதவீத சிங்கள மாணவர்களும் (39 / மொத்த இடம் : 60), 35 சதவீத தமிழ்பேசும் (17 தமிழ் மற்றும் 04 இஸ்லாமிய மாணவர்கள்) மாணவர்களும்
2012 / 13 ம் கல்வியாண்டில்  71 சதவீத சிங்கள மாணவர்களும் (27 / மொத்த இடம் : 38), 29 சதவீத தமிழ்பேசும் (07 தமிழ் மற்றும் 04 இஸ்லாமிய மாணவர்கள்) மாணவர்களும்
2013 / 14 ம் கல்வியாண்டில்  70 சதவீத சிங்கள மாணவர்களும் (47 / மொத்த இடம் : 67), 30 சதவீத தமிழ்பேசும் (09 தமிழ் மற்றும் 11 இஸ்லாமிய மாணவர்கள்) மாணவர்களும் இக்கற்கைநெறிக்குத் தெரிவாகியுள்ளமை இந்தவகையில் கவனிக்கத்தக்கது.
க.பொ.த. உயர்தரம் நிறைவுற்றதும் மாணவர்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய அல்லது வழி நடாத்தப்படக்கூடிய தமிழ்ச்சமூகத்தின் பொதுப்புத்தி அடிப்படையிலான மரபார்ந்த கற்கைகளிலிருந்து விலகாத போக்கு, ஊடகக்கற்கைநெறிகள் குறித்த ஆர்வமின்மை அல்லது போதிய விழிப்புணர்வின்மை அல்லது அல்லது ஊடகத்தொழில்சார் வாய்ப்புக்கள் குறித்த நம்பிக்கையீனம் ஆகியவை இதற்குக் காரணிகளாக அமையலாம்.

இங்கு, மாணவர்களின் கற்கைத்தேர்வுக்காக க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மொழிப்பாடத்தில் ஆகக்குறைந்தது இரண்டாம் நிலைத் தேர்ச்சியும், க.பொ.த. சாதாரண தரத்தில் ஆங்கிலப்பாடத்தில் தேர்ச்சியும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த சில வருடங்களாக 'தொடர்பாடலும் ஊடகக் கற்கைகளும்' பாட நெறி க.பொ.த. சாதாரண தரத்திலும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பாடநெறிக்கு மிகக்குறைந்தளவு தமிழ்பேசும் மாணவர்களே தோற்றும் நிலையில், இப்பாடம் இக்கற்கைநெறியைப் திருகோணமலை வளாகத்தில் தொடர்பாடல் கற்கைகள் பட்டப்படிப்பு பயில்வதற்குரிய தகுதிப் பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டால், இக்கற்கைக்குத் தகுதிபெறக்கூடிய தமிழ்பேசும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் வீழ்ச்சி அடையும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இங்கு, இன்னுமொரு கவனிக்கத்தக்க விடயம் - இக்கற்கைநெறிக்கு ஒப்பீட்டளவில் மாணவிகளை விட ஆண் மாணவர்கள் விண்ணப்பிப்பது மிகக்குறைவான விகிதத்தில் இருப்பதாகும். ஊடகத்துறையில் ஆண் மேலாதிக்கம் அதிகமாயிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படும் இக்காலகட்டத்தில் இப்போக்கு ஆழ்ந்து நோக்கத்தக்கதும் ஆய்விற்குரியதுமாகும்.

2010 / 11 ம் கல்வியாண்டில்  87 சதவீத பெண் மாணவர்களும், 13 சதவீத ஆண்  மாணவர்களும்
2011 / 12 ம் கல்வியாண்டில்  87 சதவீத பெண் மாணவர்களும், 13 சதவீத ஆண்  மாணவர்களும்
2012 / 13 ம் கல்வியாண்டில்  89 சதவீத பெண் மாணவர்களும், 11 சதவீத ஆண்  மாணவர்களும்
2013 / 14 ம் கல்வியாண்டில்  91 சதவீத பெண் மாணவர்களும், 09 சதவீத ஆண்  மாணவர்களும் இக்கற்கைநெறிக்காக தம்மைப் பதிவுசெய்திருந்தனர்.

மேற்குறித்த நிறுவனங்களை விட, கிழக்குப் பல்கலக்கழகத்தின் நுண்கலைத் துறையும், விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனமும், தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரபு மொழிப்பீடத்தின் மொழிகள் துறையும் ஊடகக்கல்வியைப் பாடநெறிகளாக அறிமுகம் செய்துள்ளன.

இவை யாவற்றிலுமே எதிர்நோக்கப்படும் சவால்களாக பின்வருவன பொதுவில் அடையாளங் காணப்படுகின்றன.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம்,  நுண்கலைத்துறை சார்ந்த பாடவிதானங்கள் தவிர்த்து (திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் கற்கைகள் பாடவிதானம் - தொடர்பாடல் என்ற பரந்த எண்ணக்கருக்களை உள்வாங்கியிருப்பதும், நுண்கலைத்துறை பாடவிதானம் அத்துறைசார்ந்த வேறுபட்ட தொடர்பாடல் வெளிப்பாடுகளை பாட நெறிகளாகக் கொண்டிருப்பதும் இதற்குக் காரணமாகின்றன) ஏனைய நிறுவனங்களின் பெரும்பாலான பாடவிதானங்கள் ஊடகக் கற்கைகள் என்ற தலைப்பில் அச்சு இதழியலையே பாடநெறிகளின்பால் உள்ளடக்குகின்றன அல்லது அதனோடொத்த இயல்களையே பெரும்பாலான பாடநெறிகளாக வழங்குகின்றன. ஊடகக்கற்கைகளில் அடங்கும் - தொலைக்காட்சி, திரைப்படக் கற்கைகள், விளம்பரங்கள், பொதுசனத் தொடர்பாடல், புதிய ஊடகங்கள். பாரம்பரிய ஊடகங்கள், புகைப்பட இதழியல் ஆகியவற்றுக்கு இன்னமும் அதிக இடம் வழங்கப்பட முடியும்.
உட்கட்டமைப்பு வசதிகள் இன்மை அல்லது அவற்றின் போதாமை.
தொழில்சார் பயிற்சிகள் மிகக் குறைவாக வழங்கப்படுதல் அல்லது தொழில்சார் பயிற்சிகளுக்கான தகுந்த வாய்ப்புக்கள் இன்மை.
தொழில்சார் பயிற்சியை வழங்குவதில் ஊடக நிறுவனங்கள் கொண்டுள்ள இறுக்கமான நடைமுறைகள்
கற்கும் மொழிமூலச் சிக்கல்கள் - தமிழ் மற்றும் ஆங்கில மொழிவழிக் கற்கைகளிலுள்ள நிறை குறைகள்
ஊடக ஆய்வுகள் போதாமை 
ஊடகக் கற்கைகளை கற்பிக்கக்கூடிய விரிவுரையாளர்கள் பற்றாக்குறை.
ஊடகக் கற்கைகளை கற்பிக்கவல்ல கல்வியாளர்கள், தொழிசார் ஊடகத்துறையில் அனுபவங்களைக் கொண்டிராத தன்மையும் அதனாலுண்டாகும் விளைவுகளும்
பட்டறிவு  நிரம்பப்பெற்ற ஆனால் பல்கலைக்கழக எதிர்பார்ப்பு நிலைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய தகுதிப்பாடுகளை: குறிப்பாக, கல்வித்தகைமைகள் கொண்டிராத தொழில்சார் ஊடகவியலாளர்களை வருகைதரு விரிவுரையாளர்களாக பல்கலைக்கழகங்களில் உள்ளீர்ப்பதற்கு தடையாகும் 'பல்கலைசார் நெறிமுறைகள்' 
ஊடகக்கல்விசார் கற்கைகளுக்கும் தொழிற்சந்தைக்குமான இடைவெளி
அரசியல் தலையீடுகள்
இளமாணிப் பட்டநெறிகளுக்கே சவால்கள் உள்ளபோது, முதுமாணி மற்றும் ஆய்வுச் செயற்பாடுகளுக்கான வழிகாட்டல் ஆளணிப் பற்றாக்குறை
பாடசாலைகளில்  ஊடகக்கல்வி
2006ம் ஆண்டு முதல் 'தொடர்பாடலும் ஊடகக்கற்கைகளும்' க.பொ.த. சாதாரண தரத்திலும் உயர் தரத்திலும்  நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்தப் பாட நெறியை அறிமுகம் செய்வதில் வட-கிழக்குப் பாடசாலைகள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இன்றுவரை இந்த நிலை தொடரவே செய்கிறது


2007
3709 (97 %)
115 (3 %)
2
3826
2008
3896 (93 %)
283 (7 %)
8
4187
2009
3983 (94 %)
253 (6 %)
2
4238
2010
4330 (92 %)
385 (8 %)
1
4716
2011
4130 (87 %)
595 (13 %)
4
4729

     
     (Department of Examination, Sri Lanka)



தமிழ்மொழிமூலப் பாடசாலைகள் இவ்வாறு 'தொடர்பாடலும் ஊடகக்கற்கைகளும்' பாடநெறியை அறிமுகம் செய்வதில் மிகக் குறைந்தளவு காட்டும் ஆர்வத்திற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்வித்திணைக்களங்கள் கணிசமான பொறுப்பை ஏற்கவேண்டும். 

கல்வியமைச்சு, உலகின் வளர்ச்சிக்கு இசைவாக, நாட்டின் தேவைகளைக் கருத்திற்கொண்டு புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்தும்போது, அதற்கேற்றவாறான வளங்களை அடையாளங் காண்பதும், உரிய அனுசரணைப் பாத்திரத்தை வழங்குவதும் கல்வித்திணைக்களங்கள் அலட்சிப்படுத்தக்கூடிய பணிகள் அல்ல. 

பொதுநோக்கில் பாடசாலைகள் மட்டத்தில் இப்பாடநெறியைக் கற்பிக்கக்கூடிய ஆசிரியர்கள் இல்லையென்பதே இப்பாடநெறியை அறிமுகம் செய்வதற்குரிய உடனடித் தடையாக பாடசாலை அதிபர்கள் முன்வைக்கும் காரணமாக உள்ளது. ஆனால், இப்பாட நெறியானது ஊடக ஆர்வம் கொண்ட எந்தவொரு ஆசிரியரினாலும், தகுந்தமுறையில் பயிற்சிக்கு அவர் ஆளாக்கப்படுவாரானால் எளிதில் கையாளக்கூடிய வகையிலேயே பாடப்பரப்பு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தெற்குப்பகுதிகளிலுள்ள கல்வித் திணைக்களங்களும் சிங்களமொழி மூலப் பாடசாலைகளும் இப்பாடநெறியை அறிமுகம் செய்வதிலும், மாணவர்களின் விருப்பத் தேர்வாக உருவாக்கிக் கொள்வதிலும் காட்டும் ஆர்வம் - தமிழ்ப் பகுதிகளில் காணப்படவில்லை என்பது வேதனையானது மாத்திரமல்ல, பூகோளமயமாதலின் வேகங்கொண்ட வளர்ச்சிக்கு இணையாகப் பயணிப்பதில் காட்டும் அசமந்தம், தமிழ் மாணவர்களுக்கான ஊடக்கல்வியைப் பயிலும் வாய்ப்பையும் அதனூடான தொழில் மற்றும் உயர்கல்விக்கான சந்தர்ப்பங்களையும் இல்லாது செய்துவிடும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. 

அதேவேளை, ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, 'தொடர்பாடலும் ஊடகக்கற்கைகளும்' பாட நெறி பல்கலைக்கழக மட்டத்திலான ஊடகக்கல்வியைத் தொடர்வதற்கு தகுதி நிலையாகக் கொள்ளப்படும் நிலை உருவாகுமானால், தற்போது தமிழ் பேசும் மாணவர்கள் பெறும் வாய்ப்பு எதிர்காலத்தில் கணிசமாகப் பாதிப்படையும் நிலையும் இதனால் உருவாகும் ஆபத்துண்டு.

ஆகவே, கல்வித் திணைக்களங்களும் பல்கலைக்கழகங்களும் உரிய திட்டமிடலுடன் ஊடகக் கல்வியை தொடர்பறா வண்ணம் கொண்டுசெல்லவும், வெவ்வேறு இலக்குகளுடன் அனுமதிகளை வரையறுத்துக் கொள்ளவும் தம்மைத் தயார்படுத்திக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.


ஊடகவியலாளர்களுக்கான ஊடகக்கல்வி

தொழிலாற்றும் ஊடகவியலாளர்கள், முறையான ஊடகக் கல்விப் பின்புலத்துடன் பணியாற்ற முனையும்போதும், காலத்துக்குக் காலம் தம்மை ஊடக அறிவு வளர்ச்சியுடன் புதுப்பித்துக் கொள்ளும்போதும், அவர்களிடமிருந்து வினைத்திறனுடனான வெளிப்பாடுகள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

இங்கு, தொழிலாற்றும் ஊடகவியலாளர்கள் அவர்களது பணி ஒதுக்கீடு அடிப்படையில் முழு நேரப் பணியாளர்களாகவும் பகுதி நேரப் பணியாளர்களாக அமைந்தாலும் - தொடர்ச்சியான ஊடகக்கல்வித் தகுதிப்பாட்டுடன் அவர்கள் தம்மை வளர்த்துக்கொள்ளும்போது, அந்த உள்ளீடுகள் அன்றாடம் வளரும் ஊடக உலகின் புதிய சவால்களை எதிர்கொள்வதற்கு அவர்களை ஆளாக்குவதுடன், போட்டித்தன்மை மிகுந்த ஊடக உலகில் - அடிப்படைக் கல்வித்தகைமைகளுடன் கூடிய உயரிய தொழிலாற்றும் பண்பாட்டையும், அறநெறிகளையும் ஊடகவியலாளர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியும்.

அதேவேளை, தற்போது தொழிலாற்றும் ஊடகவியலாளர்கள் தமது அனுபவச் செறிவுக்கும் மேலதிகமாக, ஊடகத் தொழிற்துறையில் உள்நுழையத் தம்மைத் தயார்படுத்தும் இளைய சமூகத்தின் சவால்களையும் எதிர்கொள்ள இந்த ஊடகக்கல்வி வாய்ப்பளிக்கும்.
அன்று அனுபவமும் ஆர்வமும் ஊடகத்துறையில் நுழைவதற்கான தகுதிப்பாடுகளாகக் கொள்ளப்படினும், அந்த நிலை இன்று சான்றிதழ் முதற்கொண்டு பட்டயப்படிப்பு வரை எதிர்பார்க்கப்படும் தகுதி நிலைகளாகக் கருதப்படும் காலம்வரை முன்னேறியிருக்கிறது. மிக விரைவிலேயே ஊடகத் தொழிற்சந்தையில் பட்டப்படிப்பை அடிப்படைத் தகுதியாகக் கொள்ளும் நிலை வந்துவிடுமென்பதில் சந்தேகமிருக்க முடியாது. 

குறிப்பாக, இன்று இலங்கையில் ஏறத்தாழ அனைத்துப் பல்கலைக்கழகங்களுமே ஊடகக் கல்வியை தமது கல்விப்புலத்துடன் இணைத்துவரும் நிலையில், வரும் ஆண்டுகளில் சராசரியாக ஆயிரத்துக்கும் அண்மித்த ஊடகப் பட்டதாரிகள் வெளியேறும் காலம் விரைந்தே வருகிறது. அது ஊடக வேலைவாய்ப்புச் சந்தையில் நிறைந்த போட்டித்தன்மையையும் உருவாக்கும். 

அவ்வாறான சூழலில், இன்று ஊடகத்துறையில் முறையான ஊடகக்கல்வித் தகைமையற்றுப் பணியாற்றும் ஊடகவியலாளர்களை விசேட தொகுதியினராகக் கொண்டும், ஊடகக்கல்வியில் சான்றிதழ், பட்டயப்படிப்பை நிறைவுசெய்தவர்களைக் கருதியும் அவர்களுக்கான உரிய உயர்கல்வித் தகைமைகளுக்கு அல்லது தொழில்சார் தகைமைகளுக்கு அவர்களை தகுதியுடையவராக்கிக் கொள்ளும் வண்ணம் - திட்டங்கள் தீட்டப்படவேண்டும். இந்த முயற்சியில் ஊடக நிறுவனங்கள் பல்கலைக்கழகங்களுக்கு தகுந்த அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் மூலம் அதற்கான வெளியை பல்கலைக்கழகக் கல்விமுறையினுள் உருவாக்க முடியும். 

ஆனால், தமது முழு நேரப்பணியாளர்களின் உழைப்பை மாத்திரமே விழுங்கக் காத்திருக்கும் அதிகமான ஊடக நிறுவனங்களும் உரிமையாளர்களும் - தமது பணியாளர்களை, வேதனத்துடன் பணிகளிலிருந்து விடுவித்து, அவர்களின் தொழில்சார் அறிவு வளர்ச்சிக்குத் துணை நிற்பார்களா என்பது சந்தேகமே. இலங்கையின் அதிக வினைத்திறனுடன் பணியாற்றும் முழு நேர ஊடகவியலாளர்களின் வேதனமே , சில புறநடைகள் நீங்கலாக, தனியார் துறை ஊழியர்களின் மிகக்குறைந்த மட்டத்திலான வேதனத்திலும் குறைவாக உள்ள நிலையில் - இத்தகைய வரலாற்று மாற்றங்கள் கடினமான பாதையிலேயே நகரமுடியும். எனினும், இது சாத்தியமற்ற ஒன்றல்லவே.

அதேவேளை, இத்தகைய முழு நேரக் கற்கைகளுடன், காலக்கிரமத்துக்கு ஏற்றவாறான பயிற்சிகள், செயலமர்வுகள், அனுபவத் திரட்டல்கள் ஆகியனவும் தொழிலாற்றும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படுதல் அவ்வளவு சிரமத்திற்குரிய ஒன்றாக இருக்கமுடியாது. இங்கும், பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்கள் அல்லது தன்னார்வ அமைப்புக்கள் தொடர்ந்தும் ஒரே கருப்பொருட்களில் பயிற்சிகளை வழங்குவதும், பயிற்சி என்னும் பெயரில் தமது திட்ட நிறைவேற்றல் பட்டியலில் ஒரு செலவீனத்தைப் பதிவு செய்துகொள்வதும், தொடர்ச்சித் தன்மையற்ற அல்லது விளைவுகளை மேற்பார்வையிடக்கூடிய பொருத்தமான செயலொழுங்கைக் கடைப்பிடிக்காததும் அவதானிக்கப்பட்டு வருகின்றமையை இங்கு குறிப்பிட வேண்டியதாகிறது.

பல சமயங்களில் இவ்வாறான பகுதி நேரச் செயலமர்வுகள், ஊடகவியலாளர்களின் பணிச் சோர்வுக்கு இடையிலான களிப்பூட்ட நாளாக மாத்திரமே அமைந்து விடுவதையும் அதனை இவ்வாறான பயிற்சிகளையும் செயலமர்வுகளையும்   நடாத்தும்  நிறுவனங்களும் தன்னார்வ அமைப்புக்களும் ஒருவகையில் ஊக்குவித்து, அவற்றையே வழக்காற்றாக மாற்றிக்கொள்வதையும் இங்கு மறுப்பதற்கில்லை.

இவ்வாறான திசைதிருப்பல்கள் அல்லது தளர்வூட்டல்கள் - வினைத்திறனுடனான பயிற்சிகளுக்கும் செயலமர்வுகளுக்குமெனக் காத்திருக்கும் ஊடகவியலாளர்களை சோர்வடையச் செய்யும் என்பதை கருத்திற்கொள்ள வேண்டும்.

அதேவேளை, தனியே, பத்திரிகைகளும், தொலைக்காட்சியும், திரைப்படங்களும், புதிய ஊடகங்களும் தான் ஊடகத்துறை என்ற நிலை கடந்து புதிய புதிய வாயில்கள் ஊடக வேலைவாய்ப்புச் சந்தையில் உருவாகியுள்ளதை தொழிலாற்றும் ஊடகவியலாளர்கள் கருத்திற்கொள்வதும் காலத்தின் தேவையாகும். 

ஆய்வுப்புலமாக ஊடகக்கல்வி

பிரச்சினைகளை விமர்சன ரீதியாக அணுகும் தன்மையைக் கொண்டுள்ள எவருமே தனிப்பட்ட வகையில் தாக்குதல்களுக்கு ஆளாகும் தமிழ்ச்சமூகத்தில், ஊடகக்கல்வியின் இன்னொமொரு பரிமாணமாக, அதனை ஆய்வுப்புலமாகக் கொள்வதிலும் சிக்கல்கள் எதிர்நோக்கப்படவே செய்கின்றன. 

இங்குள்ள ஊடகச் செயற்பாடுகள், ஊடகச் செல்நெறிகள் மற்றும் நெறிமுறைகள், ஊடக அறநெறிகள், ஊடகப் பண்பாடு என பல விடய தானங்களிலும் வெளிவந்திருக்கும் ஆய்வுகள் பலவும் வெவ்வேறு தளங்களிலிருந்தான அல்லது வேறு துறைசார் ஆய்வாளர்கள் தமக்குரிய ஆய்வுக்களத்திலிருந்து ஊடகத்துறை நோக்கும் ஆய்வுகளாகவே இதவரை பெருமளவில் வெளிவந்துள்ளன. இவற்றில், ஊடகக் கல்விப்பின்புலத்தினூடாக ஊடக ஆய்வுக்களங்களை அணுவதற்கான முயற்சிகள் மிகக் குறைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஊடகக்கல்வி வினைத்திறனுடன் முன்னெடுக்கப்படாத ஒரு சமூகத்தில், அக்கல்வியின் பேறான ஆய்வுப்புலம் அதிகம் விருத்தியடைந்திருக்கும் என எதிர்பார்ப்பது 

உசிதமானதல்லதாயினும், இங்கு ஆய்வுகளுக்கான தேவைகள் நிரம்ப இருப்பதைச் சுட்டிக்காட்டவே விழையப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கொண்டுள்ள நீண்டகால பத்திரிகைப் பாரம்பரியம், தென்னிந்தியாவின் ஈழம்வரைநீடித்த திரைப்படச் செல்வாக்குகள், தொலைக்காட்சியின் அல்லது குடும்பத்திரையின் அதீத நுழைவு, போராட்டச் சூழலில் ஊடகச் செயற்பாடுகள், அரசியற் கருத்துருவாக்கங்கள், ஊடகங்களின் நுண்வணிக முயற்சிகள் என ஆய்வுக்களங்கள் நீண்ட பட்டியலிடப்படும் நிலையிலுள்ளன.

இந்த ஆய்வுக் கருப்பொருட்களையொட்டி இதுவரையில் வெளிவந்துள்ள ஆக்கங்கள் - பெரும்பாலும் கட்டுரைகள் வடிவிலும் அல்லது நீடித்த கட்டுரைகளாகவும் அமையப்பெற்றிருந்தாலும் அவை யாவும் தகுந்த ஆய்வு முறையியல்களோடு அணுகப்படவேண்டும் என்பதே இங்கு முன்வைக்கப்படும் கருத்தாகும்.

தமிழ்ச்சமூகத்தில் பல்கலைக்கழகங்கள் ஊடகக்கல்வியில் ஆழக்கால் பதிக்கும்போது, இந்த ஆய்வுமுயற்சிகள் இன்னமும் வளம்பெறும் என நம்பிக்கைகொள்ள முடியும். அவ்வாறான முயற்சிகளே தமிழ்ச் சமூகத்தில் ஊடகங்களின் வகிபங்கை அல்லது எதிர்பார்ப்புக்களை விமர்சனரீதியாகவும், விஞ்ஞானரீதியாகவும் உலகின்கண் முன்வைக்க உதவும்.

இதன் இன்னுமொரு கட்டமாக, ஊடகக்கல்வியினதும் தொடர்பாடலினதும் பல்வேறு பயன்பாட்டுப் பிரயோகங்களையும் நாம் கருத்திற்கொள்ளலாம். அபிவிருத்தித்துறையில், சுகாதாரத்தில், பிரச்சினைகளைக் கையாள்வதில், முரண்பாடுகளைத் தீர்ப்பதில், உளவளத்துணை வழங்குவதில் தொடர்பாடல் வலுமிகுந்த வகிபங்கையாற்ற முடியும்.

அதேபோன்று, வெவ்வேறு துறைகளின்பால் அத்துறைகளோடு ஊடகவியலும் தொடர்பாடலும் ஒத்திசைந்து செயற்பட்டக்கூடிய ஒருங்கிணைப்புக் களங்களையும் நாம் இனங்காண வேண்டியுள்ளது. இவ்வாறான முயற்சிகள் ஊடகத்துறைசார் ஆய்வுமுயற்சிகளுக்கு வலுச்சேர்ப்பதுடன், புதிய புதிய பணிகளுக்கான வாய்ப்புக்களையும் உருவாக்க வல்லவையாகும்.

இவையாவும் ஊடகக்கல்வியின் விருத்தியடைந்த பயன்பாட்டுத் தொகுதிகளுக்குள் இடம்பெற்றாலும், தமிழ்ச்சமூகத்தில் இவற்றை நாம் கட்டமைப்பது தொடர்பில் இப்போதே உரிய திட்டமிடல் தேவைப்படுவதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஏனெனில், காலங்கடந்து செயலாற்றப்படும் எவையும் கவைக்கு உதவப்போவதில்லை என்பதை நாம் மறந்துவிடமுடியாது.
ஊடகக் கற்கைகளின் பரிமாணம் ஊடகத்துறையுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது, ஊடகக்கல்வியும் தொடர்பாடல் திறன்களும் சகல பணிகளுக்குமான ஆளுமை உருவாக்கத்தின் திறவுகோலாக கருதப்படும் கட்டத்தில் வாழும் நாம், இந்தப் புதிய சவால்களைச் சந்திக்கும் தந்திரோபாயங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும். புதிய கற்கைநெறிகள் தோற்றம்பெற வேண்டும். ஊடகத்துறையும் ஊடகக்கல்வியும் பல்பரிமாணம் பொருந்தியதாக மலரவேண்டும். 
வாய்ப்புக்களை வரவேற்போம்; சவால்களை வெற்றிகொள்வோம்.