09வருடங்களின் பின்னர் சம்பூர் பொதுமயானத்தில் பூதவுடல் ஒன்று நல்லடக்கம்

திருகோணமலை மாவட்டம் சம்பூர்  பொது மயானத்தில் 9 வருடங்களின் பின்னர்  பூதவுடலொன்று   இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்டது.


சம்பூர்  கிராமத்தை பூர்வீகமாக கொண்டுடிருந்த    செல்லப்பா இராசமாணிக்கம்   (69 வயது ) என்பவரது  பூதவுடல் தான் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னார் கிளிவெட்டி இடைத்தங்கல் முகாமில்  வசித்து வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பூர் பிரதேசத்தில் ஏற்கனவே  அரசாங்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் மற்றும் கடற்படை உயர் பாதுகாப்பு வலயம்  என சுவீகரிக்கப்பட்ட காணிகளின் எல்லைக்குள் இந்த மயானம் அமைந்திருந்தது.

முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கான காணி சுவீகரிப்பு தொடர்பாக  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் 2012இல் வெளியிடப்பட்டிருந்த விஸேட வர்த்தமானி அறிவித்தல் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்தே குறித்த பொது மயானம்  தற்போது பொது மக்களின் பாவனைக்கு மீண்டும் கிடைத்துள்ளது.