ஆரையம்பதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர் மீது தாக்குதல்

(லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இனந்தெரியாதவர்களினால் கடுமையாக தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


ஆரையம்பதியை சேர்ந்த ஏ.யோகராஜா (63வயது)என்பவரே இவ்வாறு தாக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் பிரசாரப்பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக நண்பருக்கு காத்திருந்தபோது சிவன் ஆலயத்துக்கு முன்பாகவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் தலைக்கவசனத்தினால் முகத்தினை மூடிவந்த இருவர் இந்த தாக்குதலை நடத்தியதாகவும் தாக்குதலில் காயமடைந்தவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள பொலிஸ் காவலரண் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.