போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பலாச்சோலை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச அவர்கள் பதினெட்டு இலட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றார். நீங்கள் அனைவரும் எதிரணியில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்தீர்கள். அதனால் என்ன பயனை அனுபவித்தீர்கள்?
உங்களை எதிரணிக்கு வாக்களிக்கமாறு சொல்வதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு என்ன அருகதை இருக்கின்றது? அவர்கள் யுத்தத்தில் தங்கள் உறவுகளையோ அல்லது சொத்துக்களையோ இழந்தார்களா? நீங்கள்தான் உங்கள் குழந்தைகளையும் சொத்துக்களையும் இழந்தீர்கள். அவர்கள் கொழும்பிலிருந்துகொண்டு கிடைக்கின்ற வசதிவாய்ப்புகளை அனுபவித்துக்கொண்டு உங்களை எதிரணிக்கு வாக்களிக்கச் சொல்கின்றார்கள்.
இனத்துவேஷம் பிடித்த கட்சிகளே எதிரணியில் இணைந்திருக்கின்றன. அவர்களுக்கு நாம் எவ்வாறு வாக்களிக்க முடியும்? சம்பந்தன் ஐயா அவர்கள் வெளிநாடுகளுக்கெல்லாம் பயணத்தை மேற்கொண்டு பணத்தை பெற்றுக்கொண்டு மிக ந்pண்ட காலம் எடுத்து எதிரணிக்கு ஆதரவு வழங்குவதாக தமது முடிவுகளை அறிவித்திருக்கின்றார்.
நீங்கள் மானமுள்ள தமிழர்களாயின் ஏன் ஹெல உறுமய போன்ற கட்சிகளுக்கு ஆதரவு வழங்கினீர்கள்? என்று அவர்களிடம் கேளுங்கள். நமக்கு மைத்திரிபால சிறிசேனவையோ அவரது கொள்கைகள் பற்றியோ எதுவும் தெரியாது. கிடைக்கப்போகும் பலாக்காயைவிட கிடைத்திருக்கும் களாக்காய் பெரிது என்றொரு பழமொழி இருக்கின்றது. எங்களுக்கு கிடைத்திருக்கின்ற மகிந்த ராஜபக்ச போதும். ஏனென்றால் இங்கு அபிவிருத்திகள் நடக்கின்றன. பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்பாளர் ருத்திரமலர் ஞானபாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.