இன்று முற்பகல் 11.மணி வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 20.5 வீதமான வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா,மட்டக்களப்பு,பட்டிருப்பு ஆகிய தேர்தல் தொகுதிகளில் 365163 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி மற்றும் வெல்லாவெளி பிரதேசங்களில் மக்கள் இன்று காலை முதல் வாக்களிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் 39 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 42213 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
இதேபோன்று வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் 38 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 28394பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
இன்று காலை 7.00மணிமுதல் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
வாக்களிப்பு நிலையங்களுக்கான பாதுகாப்பினை முழுமையாக பொலிஸார் மேற்கொண்டுவருவதுடன் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
வாக்களிப்பு பகுதிகளில் எதுவித வன்முறைகளும் அற்ற நிலையில் மிகவும் சுமுகமான முறையில் தேர்தல் நடைபெற்றுவருகின்றன.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 20.5 வீதமான வாக்குகள் மொத்தமான பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் கல்குடா தொகுதியில் 21.7 வீதமும் மட்டக்களப்பு தொகுதியில் 24.30வீதமான வாக்குகளும் பட்டிருப்பு தொகுதியில் 15.62 வீதமான வாக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் பவ்ரல் அமைப்பினர் ஈடுபட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.