செங்கலடி மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலகப்பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்கள் வழங்கிவைப்பு

வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் உலர் உணவுப்பொருட்களின் பெறுமதியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அதிகரித்துள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இதுவரை காலமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாரத்துக்கு 850ரூபா பெறுமதியான பொருட்களே வழங்கப்பட்டுவந்தது.எனினும் மக்களின் நிலைமை கருதி அந்த தொகையில் 1500 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள செங்கலடி,வாழைச்சேனை  பிரதேச செயலகத்துக்குட்பட்ட மக்களுக்கான பொருட்கள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

முகாம்களில் உள்ள மக்களின் அடிப்படை தேவையினை பூர்த்திசெய்யும் வகையில் இந்த பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் குறித்த பிரதேசங்களில் வாழும் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட 3000 குடும்பங்களுக்கான பாய்களும் படுக்கை விரிப்புகளும் வழங்கிவைக்கப்பட்டன.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேரடியாக முகாம்களுக்கு சென்று இவற்றினை வழங்கிவைத்தார்.

அத்துடன் முகாம்களில் உள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதுடன் உலர் உணவுப்பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.