மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வாகரை பிரதேசத்துக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பாடசாலைகளின் இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களை பார்வையிட்டார்.
அத்துடன் அவர்களுக்கான பாய்கள் மற்றும் படுக்கை விரிப்புகள் உட்பட பல்வேறு தேவைப்பாடுகளைக்கொண்ட பொருட்களையும் வழங்கிவைத்தார்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் ஏழாயிரம் குடும்பங்கள் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 19 இடைத்தங்கல் முகாம்களில் இந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்துவழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை படையினரும் இணைந்து மேற்கொண்டுவருகின்றனர்.
இதன்கீழ் வாகரை பிரதேசத்தில் உள்ள முகாம்களுக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் முகாம்களின் நிலைமைகள் தொடர்பில் குறித்த முகாம்களுக்கு பொறுப்பான கிராம சேவையாளர்களிடம் கலந்துரையாடினார்.
அத்துடன் முகாம்களில் உள்ள மக்களின் தேவைகருதி சுமார் 2000 படுக்கை விரிப்புகள் மற்றும் பாய்களையும் வழங்கிவைத்தார்.
இதேபோன்று முகாம்களில் உள்ள மக்களுக்கு சமைத்த உணவு வழங்குதல் மற்றும் சுகாதார மேம்பாடு மற்றும் குடிநீர் வசதிகள் தொடர்பிலும் முகாம்களுக்கு சென்று மக்களிடம் கேட்டறிந்துகொண்டார்.