நேற்று புதன்கிழமை பட்டிப்பளை நீர் விநியோக வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துவைத்த பின்னர் பட்டிப்பளை பிரதேசசபையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இம்முறை நடக்கவிருக்கும் தேர்தலில் மகிந்த ராஜபக்ச அவர்களே வெற்றி பெறுவார். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஏனெனில் அவர் நாட்டிற்கும் மக்களுக்கும் அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ளார். கிராமங்களை நகரங்களாக்குவதற்காகவே அவர் அதிக வேலைத்திட்டங்களை செய்திருக்கின்றார். மகிந்த ராஜபக்ச அவர்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் தான் நாம் கொங்கிறீட் வீதிகளை கண்டோம். சுதந்திரமாக வாழத் தொடங்கினோம். அதை ஏன் நாம் குழப்ப வேண்டும்.
இந்தப் பிரச்சனைகளுக்குப் பின்னால் சர்வதேச சூழ்ச்சிகள் இருக்கின்றன. இலங்கை அபிவிருத்தி கண்டு வளர்ந்து வருவதை ஏனைய நாடுகள் விரும்பாது. குறிப்பாக மேற்கத்தேய நாடுகளுக்கு இங்கு பிரச்சனைகள் இருக்கவேண்டும் என்றும் யுத்தம் நடக்க வேண்டும் என்றும் அதன் மூலம் தாம் பிழைப்பு நடத்த வேண்டுமென்ற எண்ணம் இருக்கின்றது.
ஜனாதிபதி மகிந்த ஆட்சியிலிருக்கும் வரை ஒரு அந்நியனும் நம் நாட்டிற்குள் நுழைய முடியாது. அதனால்தான் நாம் நிம்மதியாக வாழ்ந்துவருகின்றோம். அனைத்து இன மக்களும் அன்னியோன்யமாக வாழ்ந்துவருகின்றோம்.
தங்களுடைய அபிவிருத்திப் பணிகளை நியாயமான முறையில் கதைத்து செய்ய முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் வெறுமனே சண்டைகளைபிடித்துக்கொண்டிருக்கின்றது. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கின்ற உலகத்தவர்கள் தமிழர்களைப் பற்றியும் தமிழர்களின் அரசியலைப்பற்றியும் அவர்களின் வாக்குப் பிரயோகங்களைப்பற்றியும் என்ன நினைப்பார்கள். அவர்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அல்ல தமிழ்த் தேசியக் கூத்தாடிகள். யாழில் நடைபெற்ற அபிவிருத்தி கூட்டத்தின்போது நாகரீகமான வார்த்தைகளை பிரயோகிக்கத் தெரியாத இவர்களா தமிழர்களைப் பற்றி சிந்திக்கப்போகின்றார்கள். முதலமைச்சர் பொறுமையாக இருக்கும்படி கூறியபின்னரும் அவர்களை அதை கவனத்தில் கொள்ளவில்லை.
நாம் முதலில் எங்களுடைய மக்களுக்கு இருக்கின்ற அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதைச் செய்யாமல் பாராளுமன்றத்தில் போயிருந்துகொண்டு தேவையில்லாமல் நாட்களை செலவழிப்பதில் என்ன பயன் இருக்கின்றது?ஆனால் நாங்கள் எமது மக்களுக்குள்ள தேவைகளை பூர்த்திசெய்து கொடுப்பதற்காகவே பாராளுமன்றத்திற்கு சென்றோம். ஜனாதிபதியுடன் இணைந்து அதை செய்துவருகின்றோம்.
இலங்கை அரசியல் வரலாற்றில் பண்டாரநாயக்கா முதல் பல ஜனாதிபதிகள் ஆட்சியிலிருந்திருக்கின்றார்கள். அதில் நம்முடைய தமிழ்மக்களுக்காக அதிகளவான அபிவிருத்திப் பணிகளை செய்தது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒருவரே ஆவார்.
வடக்கு கிழக்கில் பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வவுனியாவிலிருந்து புகையிரத வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏ9 வீதி அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
வீடுகள் அமைத்துக்கொடுத்து மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் செய்துகொடுத்த பின்னரும் யாழ்மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போது சண்டை பிடித்தார்கள். இது தமிழினத்துக்கே அநாகரீகமான செயலாகும்.குரோத எண்ணங்களும் பழிவாங்கும் உணர்வும் அகங்காரமுமே இதற்கு காரணமாகும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் தமிழினத்தை வளர்க்கவேண்டும் என்று நினைப்பவர்கள் அவ்வாறு செயற்படமாட்டார்கள். இதையெல்லாம் கவனத்தில்கொண்டு நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றுநாகரீகமான அரசியலை செய்துகாட்டுகின்றோம்.
இங்கு நடக்கும் அபிவிருத்திக்குழுக் கூட்டங்கள் பிரச்சனைகள் இல்லாமல் மிக சுமுகமாக நடக்கின்றன. எவரும் எதையும் கதைக்கலாம். அவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் இன்று நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது.அபிவிருத்திப் பணிகள் முற்றுமுழுதாக முடிந்துவிடவில்லை.தொடர்ந்தும் நடைபெற்றுவருகின்றது.
ஏழு வருடங்களில் வெல்லாவெளி,பட்டிப்பளை,வவுனதீவு பிரதேசங்களில் நாம் பல அபிவிருத்திகளை கண்டிருக்கின்றோம். இவையெல்லாம் நடக்குமென்று நாங்கள் எதிர்பார்த்தோமா?இந்த ஏழு வருடங்களில் நடைபெற்ற எந்தத் தேர்தலிலும் நீங்கள் அரசிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
ஆனால் நாங்கள் தொடர்ந்தும் உங்களுக்கு சேவை செய்துவருகின்றோம். வீதிகள்,குடிநீர்,மின்சாரம் போன்ற அனைத்து வசதிகளையும் பெற்றுத் தந்திருக்கின்றோம். நீங்கள் வாக்களித்தவர்கள் வீடுகளில் படுத்துறங்குகின்றார்கள். நாங்கள் தொடர்ந்தும் உங்களுக்கு சேவைகளை செய்துவருகின்றோம். நீங்கள் அனைவரும் சேர்ந்து அவர்களை வாழவைக்கின்றீர்கள்.அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள்.