தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் பேசினாலே தோற்றுவிடுவோம் என்ற மனநிலை தென்பகுதியில் உள்ளது – சந்திரகாந்தன்

ஜனாதிபதித்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் பேசினாலே தோற்றுவிடுவோம் என்ற மனநிலை தென்பகுதியில் ஏற்பட்டிருக்கின்றது. அது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கான ஆபத்தல்ல.தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற ஆபத்தாகும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட கிரான்குளத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்து திறக்கப்பட்ட தேர்தல் பிரசார அலுவலகத்தினை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினரும் முன்னாள் மண்முனைப்பற்று பிரதேசசபையின் உறுப்பினருமான கந்தசாமியின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ஜனாதிபதி தேர்தல் ஒன்றை ஒரு நாடு சந்தித்தால் அதில் யாரும் ஒதுங்கியிருக்க முடியாது. இன்று தமிழர்களுடைய முக்கிய கட்சியாக கருதப்படுகின்ற கட்சி தடுமாறுகின்றது.தடம் புரண்டிருக்கின்றது. தேசியரீதியாக இருக்கின்ற இரு பெரிய கட்சிகளும் அவர்களுடன் பேசவில்லை. இந்தளவிற்கு தமிழர்களின் பிரச்சனை தேசிய ரீதியாக கவலைக்கிடமான நிலையில்  இருக்கின்றது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் பேசினாலே தோற்றுவிடுவோம் என்ற மனநிலை தென்பகுதியில் ஏற்பட்டிருக்கின்றது. அது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கான ஆபத்தல்ல.தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற ஆபத்தாகும். அதைக்கூட பெருமையானதொரு விடயமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வது கவலைக்குரிய விடயமாகும்.

தேசிய ரீதியான கொள்கைகளை வகுக்கின்ற தேசிய ரீதியான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்ற பிரகடனங்களை முன்னெடுக்கின்ற நாட்டின் முக்கிய தலைவரை தேர்ந்தெடுக்கின்ற தேர்தல் காலத்தில் தமிழர்களின் பிரச்சனை செல்லாக்காசாக போகின்ற நிலை தோன்றியிருப்பது எவ்வளவு ஆபத்தான விடயம் என்பதை தமிழ் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இரண்டு மூன்று நாட்களாகத்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினுடைய அறிக்கைகள் வருகின்றன. நாங்கள் யாருக்கு ஆதரவளிப்பது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் இருந்தபோதும் மக்களுக்குத் தெரியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று  என செல்வராசா எம்.பி கூறியிருக்கின்றார். மைத்திரி சொல்வது போல ஜனாதிபதி முறையை ஒழிக்கவேண்டும் கொடுங்கோலாட்சியை ஒழிக்க வேண்டும் ஊழல் ஆட்சியை ஒழிக்க வேண்டும் இதற்காக நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம் இருந்தாலும் நாங்கள் யாருக்கு ஆதரவளிப்பது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று சுரே~; பிரேமச்சந்திரன் எம்.பி கூறுகின்றார். குழப்பமில்லாமல் முடிவை எடுத்துவிட்டு அதை தெளிவாக அறிவிக்காமல் மக்களை குழப்பிவருகின்றனர்.

ஏனென்றால் அவர்களுடைய நோக்கம் இந்நாட்டில் மீண்டும் குழப்பமும் பிரச்சனைகளும் இருக்க வேண்டும் என்பதாகும். அப்படியிருந்தால்தான் அரசியல் செய்ய முடியும் என அவர்களும் வெளிநாடுகளல் இருக்கின்ற அவர்களுடைய எஜமான்களும் சொல்கின்றார்கள்.

நாங்கள் வெளிநாட்டில் வாழவில்லை உள்நாட்டில் வாழ்கின்றோம் இலங்கையில் இருக்கின்றோம் என்பதை மக்கள் தான் எண்ணிப்பார்க்க வேண்டும். இங்கிருக்கின்ற ஜனாதிபதி எங்களுக்கு மிக நெருக்கமானவராக இருக்க வேண்டும் எங்களுடைய பிரச்சனைகளை தீர்த்துவைப்பவராக இருக்க வேண்டும். அந்தவகையில் தற்போதுள்ள நிலைமைகளை பார்க்கும்போது மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பது தான் தமிழர்களுக்கு சாத்தியமான விடயமாகும்.

அந்த வகையிலேயே பல்வேறு கலந்துரையாடல்களின் மத்தியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினை ஆதரிக்க முன்வந்தது.வெல்லப்போகும் ஜனாதிபதிக்கு மட்டக்களப்பு மக்கள் வாக்களித்தனர்.அதற்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் செயற்பட்டனர்.