கடந்த இரண்டு வாரமாக பெய்துவந்த மழை கடந்த இரண்டு நாட்களாக ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு தொடக்கம் கனமழை பெய்துவருகின்றது.
இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்;டத்தின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் மீண்டும் மக்கள் இடம்பெயரும் நிலையேற்பட்டுள்ளது.
பெய்துவரும் கடும் மழை காரணமாக களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதி கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.
களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் உள்ள அனைத்து கிராம சேவையாளர்கள் பிரிவுளும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.
பிரதேச செயலக தகவல்களின் அடிப்படையில் இதுவரையில் 1938 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் இவர்கள் எட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 459 குடும்பங்களை சேர்ந்த 1533பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் 1479 குடும்பங்களை சேர்ந்த 6491பேர் உறவினர்கள் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக களுவாஞ்சிகுடி பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவிக்கின்றது.
இவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டுவருவதுடன் உறவினர் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளவர்களுக்கு உலர் உணவுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட்டுள்ளதாககவும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவிக்கின்றது.
இதேவேளை பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சென்ற மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.
அத்துடன் முகாம்களில் உள்ள மக்களையும் சந்தித்ததுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டதுடன் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறும் உத்தரவிட்டார்.