எந்த நாட்டிடமும் காசுவாங்கி தேர்தலில் போட்டியிடவேண்டிய அவசியம் த.தே.கூட்டமைப்புக்கு இல்லை –அரியம் பா.உ.

எந்த நாட்டிடமும் காசு வாங்கி தேர்தலில் போட்டியிடவேண்டிய தேவை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இல்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.


2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபை தேர்தலின்போது முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு இந்தியா முழுமையான ஆதரவு வழங்கியதுடன் அவர்களுக்கான உதவிகளையும் செய்தது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இந்திய அரசாங்கம் தன்னை தோற்கடிப்பதற்கு 10 கோடி ரூபா வழங்கியதாக அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சந்திரகாந்தன் தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

தன்னை தோற்கடிப்பதற்கு 10 கோடி ரூபா தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கியதாக அண்மையில் கூறியிருக்கின்றார்.இதுஅப்பட்டமான பொய்யாகும்.

இந்தியாவினை பொறுத்தவரைக்கும் 2008ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் சந்திகாந்தனை முழுமையாக ஆதரித்தது இந்தியா.அத்துடன் பல்வேறுபட்ட உதவிகளைக்கூட இந்திய அரசாங்கம் செய்திருந்தது.

2008ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடவில்லை.2012ஆம் ஆண்டு போட்டியிட்டோம்.இந்தியாவினை பொறுத்தவரையில் இந்தியா பகிரங்கமாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எந்த உதவியையும் வழங்கவில்லை.பகிரங்கமாக எந்த இடத்திலும் எங்களை ஆதரித்தாக தெரிவிக்கவும் இல்லை.

அவ்வாறான ஒரு நிலையில் திட்டமிட்ட வகையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் சந்திரகாந்தன் கூறவேண்டிய தேவை என்ன இருக்கின்றது என்று ஊகிக்கவேண்டியுள்ளது.

உண்மையில் இந்திய அரசாங்கம் எங்களுக்கு 10கோடி தந்ததை அவர் அறிந்திருந்தால் தேர்தல் பிரசாங்களின்போது ஏற்கனவே கூறியிருப்பார்.கூறியிருக்கவேண்டும்.ஆனால் திட்டமிட்டு அவரை இவ்வாறு கதைப்பதற்கு யாரும் தூண்டினார்களா அல்லது தற்போது இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சில நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஊடகங்களில் கருத்துவரும்போது இவ்வாறான கருத்தினை கூறுவதற்கு இலங்கை அரசாங்கம் அவரை பாவிக்கின்றதா என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கின்றது.

ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த நாட்டிலும் காசு வாங்கி தேர்தல் பிரசாரம் செய்யவேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.மக்கள் தெளிவாகவுள்ளனர்.மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பின்னால் நிற்கின்றார்கள் என்பதை தொடர்ச்சியாக நிரூபித்துவருகின்றார்கள்.