திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த மாதம் (19) நடைபெற்ற விளையாட்டு விழா இறுதி நிகழ்வில், மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள் சம புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைத் தட்டிக் கொண்டன. மூன்றாம் இடத்தினை அம்பாறை மாவட்டம் பெற்றுக் கொண்டது.
இறுதி நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் கலந்து கொண்டதுடன், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்ட மற்றும் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்கள் விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் பிரதேச செயலக ரீதியாக ஆரம்பிக்கப்படும் விளையாட்டுப் போட்டிகள், மாவட்ட ரீதியில் நடத்தப்பட்டு இறுதியாக மாகாண ரிதியான போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், திவிநெகும பிரதிப் பணிப்பாளர் பி.குணரெட்ணம், கணக்காளர் எஸ்.பிரேம்குமார், விளையாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.