ஏறாவூர் பற்று பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் போசாக்கு மாத நிகழ்வுகள்

பெண்களினதும் குழந்தைகளினதும் ஆரோக்கியத்தினையும் வளர்ச்சியையும் கருத்தில்கொண்டு சுகாதார அமைச்சினால் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் போசாக்கு மாதம் நாளை ஆரம்பமாகின்றது.

ஜுலை முதலாம் திகதி தொடக்கம் கிராமிய மட்டத்தில் உள்ள கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் சிறுவர்களின் போசாக்கான உணவின் தேவைப்பாடுகளை வலியுறுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் நிகழ்வு இன்று ஏறாவூர் பற்று பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலையில் நடைபெற்றது.

இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்போம் நலம்,பலம், புத்திக்கூர்மையினை பெறுவோம் என்னும் தலைப்பில் இந்த ஆண்டுக்கான போசாக்கு மாதம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

ஏறாவூர் பற்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகம் பிரதிப்பணிப்பாளர் ரஹ{மான்,பொதுச்சுகாதார தாதிய சகோதரிகளான திருமதி தேவகி ஜெயகரன்,திருமதி தயாநிதி பத்மநாதன் மற்றும் சிரேஸ்ட பொதுச்சுகாதார பரிசோதகர் கிருஸ்ணபிள்ளை உட்பட பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,சுகாதார தாதியர்கள்,மலேரியாக தடுப்பு பிரிவு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

போசாக்கு மட்டத்தினை அதிகரித்தல்,இரும்புச்சத்து நிறைந்த உணவினை பெற்றுக்கொள்ளல்,பாதுகாப்பான தாய்மாரை கிழக்கு மாகாணத்தில் உருவாக்கி ஆரோக்கியமான சமூகத்தினை உருவாக்கும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்வில் கர்ப்பிணிப்பெண்கள்,பாடசாலை மாணவர்கள் உட்பட பெருமளவான பெண்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆரோக்கியமான சமூகத்தினை உருவாக்குவதற்கு தேவையான உணவுப்பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகள் தொடர்பிலான கண்காட்சியும் திறந்துவைக்கப்பட்டது.

மக்களிடையே பாரம்பரிய உணவு வகைகளை பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த கண்காட்சி உள்ளதாக ஏறாவூர் பற்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வுகளுக்கு வேல்ட் விசன் அமைப்பு அனுசரனை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.