தைத்திருநாளை முன்னிட்டு மட்டக்களப்பில் பல்வேறு நிகழ்வுகள்


(புருஷோத்)

தைத்திருநாளை முன்னிட்டு மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.


தைத்திருநாளை சிறப்பிக்கும் வகையில் விளையாட்டுக்கழகங்கள், பொது அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடுசெய்துள்ளன
.
இதன் கீழ் களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட பெரியகல்லாறு கல்லாறு விளையாட்டுக்கழகம் தைத்திருநாளை முன்னிட்டு மாபெரும் மரதன் ஓட்டப்போட்டியை நடத்தியது.

இன்று காலை பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்தசித்திவிநாயகர் ஆலயத்துக்கு முன்பாக மரதன் ஓட்டப்போட்டி ஆரம்பமானது.

கல்லாறு விளையாட்டுக்கழக தலைவர் கே.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பட்டிருப்பு வலய உதவி உடற்கல்வி பணிப்பாளர் நாகராஜா அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.

இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பி.ரி.நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் பாடசாலை அதிபர்கள்,ஆலயங்களின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

இந்த மரதன் ஓட்டப்போட்டியில் பெரியகல்லாறு ஜோன்டி பிரிட்டோ விளையாட்டுக்கழகத்தின் வீரர்களான என்.விமலநாதன்,ரி.சிந்துஜன் ஆகியோர் முதலாம் இரண்டாம் இடங்களைப்பெற்றதுடன் பெரியகல்லாறு சூரியா விளையாட்டுக்கழகத்தின் ஏ.துஸ்யந்தன் மூன்றாம் இடத்தைப்பெற்றதுடன் நான்காம்,ஐந்தாம் இடங்களை பெரியகல்லாறு கோல்டன் விளையாட்டுக்கழக வீரர்கள் பெற்றுக்கொண்டனர்.

இதன்போது வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.