2013ம் ஆண்டிற்கான தொலைக்காட்சி அரச விருதில் அதி கூடிய விருதுகளை பெற்று இர்பான் மொஹமட் சாதனை


தொலைக்காட்சி அரச விருது வழங்கும் விழா 2013ம் ஆண்டு தொலைக்காட்சி அரச விருது வழங்கும் விழா நேற்றைய தினம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு பண்டாராநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

கலை மற்றும் கலாசார, அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட இவ்விருது வழங்கும் விழாவில் வசந்தம் தொலைக்காட்சி 5 விருதுகளை பெற்று கொண்டது.

ஆண்டின் சிறந்த விளையாட்டு நிகழ்ச்சிக்கான விருது இலண்டன் ஒலிம்பிக் 2012 நிகழ்ச்சிக்காக அதன் தயாரிப்பாளர் இர்பான் மொஹமட்டிற்கு வழங்கப்பட்டது. சிறந்த சஞ்சிகை நிகழ்ச்சிக்கான விருதும் 7ம் நாள் நிகழ்ச்சி பெற்று கொண்டது.

2012ம் ஆண்டில் உலகில் இடம்பெற்ற நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட ரீகெப் நிகழ்ச்சியானது ஆண்டின் சிறந்த புதுமையாக்க நிகழ்ச்சிக்கான விருதினை பெற்று கொண்டது. இவ்விருதுகளை நிகழ்ச்சி இயக்குனரும், தயாரிப்பாளருமான இர்பான் மொஹமட் மற்றும் உதவி தயாரிப்பாளர்களான எம்.எம்.ரியாஸ், எல்.ஜனநாயகன் ஆகியோர் பெற்று கொண்டனர்.

சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான விருது காத்தமுத்து புண்ணியமூர்த்தியினால் தயாரிக்கப்பட்ட ஒட்டோகிராப் நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்டது. சிறைச்சாலைகளும் மனிதர்களும் என்ற செய்தி அறிக்கையிடலுக்கான விருதும் இர்பான் மொஹமட்டிற்கு வழங்கப்பட்டது.

விருது வழங்கும் விழா ஒன்றில் தனி நபர் ஒருவர் பெற்று கொண்ட அதி கூடிய விருதுகளை பெற்று இர்பான் மொஹமட் சாதனை படைத்தார். தமிழ் தொலைக்காட்சிகளுக்கென மொத்தமாக வழங்கப்பட்ட 10 விருதுகளில் 5 விருதுகளை வசந்தம் தொலைக்காட்சி தட்டிச்சென்று மீண்டும் சாதனைபடைத்துள்ளது.

இதேவேளை சுயாதீன தொலைக்காட்சிக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. கடந்த 2011ம், 2012ம் ஆண்டுகளுக்கான விருது வழங்கும் நிகழ்வில் வசந்தம் தொலைக்காட்சி 9 விருதுகளை பெற்று கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தேசத்தின் சாதனையாளர் விருது வழங்கி சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளரும், நாடக நடிகையும், கலைஞருமான கமலினி செல்வராஜாவுக்கு விருது அறிவிக்கப்பட்டது. இவ்விருதினை அவரது புதல்வர் அதிசயன், தாயார் சார்பாக விருதினை பெற்று கொண்டார். சிங்கள மொழியில் தேசத்தின் சாதனையாளர் விருது சினிமாவின் மிக சிறந்த சாதனையாளரான பேர்டி குணதிலகவிற்கு வழங்கப்பட்டது.

முன்னாள் ஆங்கில செய்தி வாசிப்பாளரான நொய்லின் ஹொன்டுக்கும் ஆங்கில மொழி சார்பாக தேசத்தின் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

சிறந்த கலை இயக்கத்திற்காக சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பரண டவும' தொலைக்காட்சி நாடகத்தை இயக்கிய குமார கரவ்தெனிய விருதினை பெற்று கொண்டார். இந்நிகழ்வில் கலை கலாச்சார அலுவல்கள் அமைச்சர் ரி.பி ஏக்கநாயக்க மற்றும் அவ் அமைச்சின் அதிகாரிகள் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.