ஆற்றல் பேரவையின் சாதனையாளர்கள் கௌரவிப்பு

மண்முனைபற்று பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியை நோக்காகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆற்றல் பேரவையின் ஏற்பாட்டில் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் ஆற்றல் பேரவையின் தலைவர் பூ.பிரசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் சத்தியநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண பிரதி தபால்மா அதிபர் திருமதி அருள்ராஜா,மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் வாமதேவன்,மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் திருமதி அருள்பிரகாசம் ஆகியோபரும் கௌரவ அதிதிகளாக சட்டத்தரணி சுலோக்ஸன்,மண்முனைப்பற்று பெரும்பாக உத்தியோகத்தர் கல்பனா ,மண்முனைப்பற்று கல்விக்கோட்ட பணிப்பாளர் கந்தசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மண்முனைப்பற்று கல்விக்கோட்டத்துக்குட்பட்டத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்த 42 மாணவர்களும் நூறு புள்ளிகளுக்கு மேல் பெற்ற 118 மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது மாணவர்கள்,ஆசிரியர்கள்,அதிதிகள் ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில் இருந்து நிகழ்வு இடம்பெறும் பகுதிக்கு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்.

அத்துடன் மாணவர்களின் வெற்றிக்கு வழிகாட்டிய ஆசிரியர்களும் இதன்போது அதிதிகளால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.