கிழக்கு மாகாணத்தில் பெண் சாரணியத்தினை வளர்க்க நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் பெண் சாரணியத்தினை கட்டியெழுப்பும் வகையில் பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இலங்கை பெண் சாரணிய சங்கமும் கிழக்கு மாகாண பெண் சாரணிய சங்கமும் இணைந்து இதற்கான பணிகளை முன்னெடுத்துவருகின்றது.
இதன் கட்டமாக மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பெண் சாரணியர்களுக்கான பயிற்சிப்பட்டறை வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண பெண் சாரணிய ஆணையாளர் திருமதி டிலாந்தினி மோகனகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை பெண் சாரணிய சங்கத்தின் பிரதம ஆணையாளர் திருமதி ஜெஸ்மின் ரஹீம்,பிரதி ஆணையாளர் திருமதி விசாகா திலனரட்ன,மேலதிக ஆணையாளர் சுலாறி ஜயவர்த்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பெண் சாரணிய வலய,கோட்ட ஆணையாளர்கள்,பெண் சாரணிய வழிகாட்டுனர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது பெண் சாரணியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை மற்றும் பெண் சாரணியத்தின் வளர்ச்சி போன்றவை தொடர்பில் கருத்துகள் பகிரப்பட்டன.
அத்துடன் தலைமைத்துவம் பெண் சாரணியத்தின் பங்கு தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாணத்தில் பெண் சாரணியத்தினை வளர்ச்சி நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களைக்கொண்டதாக இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுவருவதாக இலங்கை பெண் சாரணிய சங்கத்தின் பிரதம ஆணையாளர் திருமதி ஜெஸ்மின் ரஹீம் தெரிவித்தார்.