களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் கோட்டைக்கல்லாறு பாலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை இரவு 07 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், தனியார் பஸ் வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்குநேர் மோதி விபத்திற்கு உள்ளானது.
கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த தனியார் பஸ் வண்டியும் மட்டக்களப்பிலிருந்து காரைதீவு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளுமே விபத்திற்கு உள்ளானதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மேட்டார் சைக்கிளில் சென்றவரே விபத்தில் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து இவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் றுதேசன் தெரிவித்தார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை இரவு 8.10 மணியளவில் இவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.முருகானந்தம் தெரிவித்தார்.
காரைதீவு வெட்டுவாய்க்கால் வீதியைச் சேர்ந்த 56 வயதான தேவராச என்பவரே விபத்தில் மரணமடைந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
