சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்த மட்டக்களப்பில் விசேட நடவடிக்கைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்தி விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளில் பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டுவருகின்றது.
இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

பொலிஸ் திணைக்களம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஏற்பாட்டில் இன்னர் வீல் கழகம் இந்த பணிகளை மேற்கொண்டுவருகின்றது.

இதன் கீழ் பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக விளக்கமூட்டும் ஒருநாள் செயலமர்வு இன்று களுதாவளை மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

களுவாஞ்சிக்குடி பொலிஸார், பட்டிருப்பு வலய கல்வி பணிமனையுடன் இணைந்து சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் இச்செயலமர்வினை நடத்தினர்.

இச்செயமலர்வில் பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட 13 பாடசாலைகளைச் சேர்ந்த 500 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்னாயக்க, இன் வீல் கழகத்தின் திட்ட இணைப்பாளர் ஜசீ முளர்,பட்டிருப்பு வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் கே.ஞானராஜா குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி பாதிய ஜெயதிஸ்ஸ  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் விழிப்புணர்வு கருத்துகள் வழங்கப்பட்டதுடன் விழிப்புணர்வு கலை நிகழ்வுகளும் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.