( எஸ்.எம்.எம்.றம்ஸான் )
கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வளர்ச்சியில் ஒவ்வொருவரும் பங்காளியாகுங்கள் என வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நசீர் அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வெள்ளி விழா அங்குரார்ப்பண வைபவத்தில் தலைமை தாங்கி நடாத்திய வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம்.நஸீர் அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பொது மக்களுக்கு வைத்தியசாலையின் வளர்ச்சி பற்றி உரையாற்றும் போதே மேற்கண்டவாறு பகிரங்க அழைப்பை விடுத்தார்.
இவ்வைத்தியசாலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு வைத்தியசாலையின் உள்ளகப்பாதை அமைப்பதற்கான அடிக்கல் நடல்,பாதை யாத்திரை. கண் சிகிச்சைப்பிரிவு தாய்பலூட்டல் பராமரிப்புப் பிரிவு உட்பட இன்று பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் போன்றன ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் இறுதியில் பொதுக் கூட்டமும் நடைபெற்றது.
அங்கு வைத்திய அத்தியட்சகர் உரையாற்றுகையில் .............
“ஒரு பிரதேசத்தின் ஆரோக்கியம் அப்பிரதேசத்தின் வைத்தியசாலையின் உன்னத சேவையில் தங்கியுள்ளது. 1988.11.05 ஆம் திகதி ஒரு மகப்பேற்று மருத்துவ மனையாக ஆரம்பிக்கப்பட்ட இவ்வைத்தியசாலை பல்வேறு தரப்பினரின் பங்களிப்புடன் பரிணாம வளர்ச்சிகண்டுள்ளதையிட்டு நான் ஆனந்தமடைகின்றேன்.
இவ்வைத்தியசாலையை முதன் முதலில் ஆரம்பித்து அதன் ஆரம்ப கால வளர்ச்சியில் பங்கெடுத்தவர் இன்றும் இவ்வைத்தியசாலையின் வளர்ச்சிப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கிறார் அவர்தான் எங்களது முன்னாள் அமைச்சர் ஏ.ஆர் மன்சூர் என்பதை நாம் மறக்கமுடியாத ஒரு விடயமாகும்.
அவர் மாத்திமின்றி, தனது அரசியல் அதிகாரத்தினால் இவ்வதைதியசாலைக்கு எந்த வகையிலெல்லாம் உதவ முடியுமொ அவ்வாறெல்லாம் உதவி செய்து இவ்வைத்தியசாலையை இன்றுள்ள நிலையக்கு உயர்த்தியவர் மர்{ஹம் எம்.எச்.எம். அஸ்ரப் என்பதும் மறப்பதற்கில்லை.
இவ்வைத்தியசாலைக்கு மாத்திரமல்ல, இந்நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களுக்குமான வரலாற்று முக்கியத்துமிக்க நற்பணிகளை புரிந்த அவரின் பெயர் நிலைக்க வேண்டுமென்பதற்காக அனைவரினதும் வேண்டுகோளின் பேரில் இவ்வைத்தியசாலைக்கு அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மர்{ஹம் எம்.எச்.எம். அஸ்ரப்பின் மறைவின் பின்னர் அவரின் துணைவியார் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப்பின் சேவையையும் நாம் மறக்க முடியாது.
அதன் பின் பல்வேறு மட்டங்களிலும் உள்ள பல அரசியல்வாதிகள் பல்வேறுபட்ட உதவிகளை இவ்வைத்திய சாலைக்குச் செய்துள்ளனர்.
இப்பிரதேசத்தின் அரசியல் தலைமைகள் மாத்திமின்றி, பல்வேறு துறைசார்ந்தோரும் இவ்வைத்தியசாலையின் வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பதை மறக்க முடியாது.
இவ்வைத்தியசாலையினூடாக கல்முனைப் பிரதேச மக்கள் மாத்திரமின்றி, பொத்துவில் தொடக்கம் துறைநீலாவணை வரையுள்ள சகல இன மக்களும் இவ்வைத்தியசாலையினால் நன்மையடைந்து வருகின்றனர்.
ஒரு வைத்தியசாலையின் வளர்ச்சி அவ்வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்கள், தாதிகள், ஊழியர்களின் பங்களிப்பு மாத்திரமல்லாது, அவ்வைத்தியசாலை அமைந்துள்ள பிரதேசத்தின் மக்களின் ஒத்துழைப்பிலும் தங்கியுள்ளது.
அந்த வகையில் இற்றைக்கு 25 வருடங்களுக்கு முன்னர் ஒரு மகப்பேற்று மருத்துவ மனையாக உருவான இவ்வைத்தியசாலை பல்வேறு மட்டங்களிலிருந்து உயர்ந்து இன்று மத்திய அரசாங்கத்தின் நேரடி நிர்வாகத்தின் இயங்கும் வைத்தியசாலையாக மாறியுள்ளது.
இவ்வெள்ளி விழா வைபங்கள், அதனுடன் தொடர்பான அபிவிருத்தி நடவடிக்கைகள் எதிர் வரும் டிசம்பர் 14ஆம் திகதி வரையும் அதன் பின்னரான தினங்களிலும் இடம்பெறவுள்ளன. சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ள வெள்ளி விழாவின் பிரதான வைபவத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
அத்துடன், பல்வேறு பிரச்சினைகள் சவால்களுக்கு மத்தியிலும் வளர்ச்சிகண்டுள்ள இவ்வைத்தியசாலை பல்வேறு தேவைகளையும் வேண்டிநிற்கின்றது. இத்தேவைகள் நிறைவேற வேண்டும். அதனால் இப்பிரதேசத்திலிருந்து இவ்வைத்திசாலைக்கு சிகிக்சை பெறவரும் நோயாளர்கள் பயன்பெற வேண்டும். அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகும்.
அந்த வகையில கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வளர்ச்சியில் ஒவ்வொருவரும் பங்காளியாகுங்கள் என நான் அனைத்துத் தரப்பினருக்கும் பகிரங்கமான வேண்டுகோள் ஒன்றை விடுக்க விரும்புகின்றேன்” என வைத்திய அத்தியட்சகர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு, பாடசாலை மாணவர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.