கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் பாரம்பரிய சிறுகைத்தொழில் அமைச்சு என்பன இணைந்து இந்த திட்டத்தினை முன்னெடுத்துவருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அண்மைக்காலமாக உல்லாசப்பயணிகளின் வருகை அதிகரித்துவருவதனையடுத்து அவர்களை கவரும் வகையில் உற்பத்தி பொருட்களை காட்சிபடுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மலர்ச்செல்வனின் ஏற்பாட்டில் கைவினை உற்பத்தி திறனாக என்னும் தலைப்பில் கருத்து பரிமாற்றல் செயலமர்வு இன்று மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பாரம்பரிய சிறுகைத்தொழில் அமைச்சரின் தேசிய இணைப்பாளருமான செல்வி க.தங்கேஸ்வரி மற்றும் பேராசிரியர் சி.மௌனகுரு உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பண்பொருள்,மட்பாண்ட பொருள்,ஆபரணங்கள்,பிரம்பு பொருள்,தும்பு பொருள்,வெண்கல பொருள்,கைத்தறி போன்ற சிறு கைத்தொழில்கள் கலைப்படைப்புகள் மற்றும் அதன் தரத்தினை அதிகரித்து பொருளாதார ரீதியில் அவற்றின் சந்தை வாய்ப்பினை அதிகரிப்பது தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களினால் கருத்துரைகள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்டைய உற்பத்தி முறைகள் அருகிவரும் நிலையில் அவற்றினை நவீன மயப்படுத்தி எவ்வாறு சந்தை வாய்ப்பினை அதிகரித்துக்கொள்ளலாம் என்பது தொடர்பிலும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
இந்த செயலமர்வில் பாரம்பரிய சிறுகைத்தொழிலாளர்கள், கைத்தொழிலாளர்கள் மற்றும் தொழில் வழங்குனர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தமது கருத்துகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வுக்கான அனுசரனையை உலக நண்பர்கள் அமைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.