அனைவரது கண்களையும் கலங்கவைத்த “அம்மா” வீதி நாடகம்.

(மா.சசி)

சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வாரத்தை முன்னிட்டு நேற்று மண்முனை மேற்குப் பிரதேச செயலகத்தில் அரங்கேற்றப்பட்ட சிறுவர்களை விட்டு தாய்மார் வெளிநாடு செல்வதால் பிள்ளைகள் படும் துன்பங்கள் கொடுமைகளை சித்திரிக்கும் “அம்மா” வீதி நாடகம் அனைவரது கண்களையும் கலங்க வைத்தது.
மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் வெ.தவராஜாவின் நெறியாழ்கையில் பிரதேச செயலக பட்டதாரிப் பயிலுனர்களால் நடிக்கப்பட்ட இவ் வீதி நாடகமானது தற்போது பெண்கள் கணவன்மாரின் கோரிக்கைகளையுமு; மீறி சிறுவர்களை தந்தையிடமும் உறவினர்களிடமும் விட்டுச் செல்வதால் சிறுவர்கள் துன்புறுத்தப்படுவதனையும் அடிமைப்படுத்தப்படுவதனையும் அதனால் அவர்கள் அடையும் வேதனைகளையும் தந்தை வெளிநாட்டுப்பணத்தில் மதுவுக்கு அடிமையாவதால் பிள்ளைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் சித்திரிப்பதாக அமைந்திருந்தது.

இவ் வீதி  நாடகம் பிரதேச செயலாளர் தலைமையில் அரங்கேற்றப்பட்ட போது மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாளர்ஸ் இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகவும்  மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், மண்முனை மேற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.சண்முகநாதன் மற்றும் மண்முனை மேற்கு  உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு  ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும் வவுணதீவு அபிவிருத்தி அமைப்பின் திட்ட முகாமையாளர் எல்.ஆர்.டிலிமா,மாவட்ட கலாசார இணைப்பாளர் ரி.மலர்ச்செல்வன் ஆகியோர் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டிருந்ததுடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பிரதேச செயலக அதிகாரிகள் பொதுமக்கள் மாணவர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

இவ் வீதி நாடகத்தைப் பார்த்த அனைவரும் கண்கலங்கியதுடன் பலர் தங்களையே கட்டுப்படுத்த முடியாத நிலையில் கண்ணீர் மல்கிய நிலை காணப்பட்டது.இந் நிலையில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அரசாங்க அதிபரைக் கூட அந்த தாய்ப் பாசம் விட்டுவைக்கவில்லை.