காத்தான்குடியிலுள்ள வார உரைகல் எனப்படும் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான எம்.ஐ.எம்.றஹ்மத்துல்லா(புவி)என்பவரை அவரின் வீட்டில் கஞ்சா வைத்திருந்ததாக கூறி காத்தான்குடி பொலிசார் சந்தேகத்தின் பேரில் வியாழக்கிழமை(31.10.2013)காலை கைது செய்துள்ளனர்.
காலை 7மணியளவில் மேற்படி பத்திரிகையின் ஆசியரின் வீட்டுக்கு சென்ற பொலிஸ் குழு ஒன்று அவரின் வீட்டுக்குள் பொலிஸ் நாய் மூலம் தேடுதல் நடாத்திய போது கஞ்சா கட்டு ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.
இது அவரின் வீட்டு வளாகத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து மேற்படி பத்திரிகையின் ஆசிரியரை பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
என்னுடைய வீட்டில் கஞ்சா இருக்கவில்லை இது என்ன அநியாயம் என மேற்படி ஆசிரியர் அவரை கைது செய்த போது பொலிசாரிடம் கூறியதாக தெரிய வருகின்றது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா 198 கிராம் எனவும் இவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து மேற்படி பத்திரிகையின் ஆசிரியரின் மனைவி மற்றும் மகன் ஆகிய இருவரும் சட்டத்தரணி எம்.றிஸ்வி என்பவரின் ஊடாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று இது திட்டமிட்டு மேற் கொள்ளப்பட்ட செயல் எனவும் இவருக்கு தொடாந்து அச்சுறுத்தல் இருந்து வந்ததாகவும் கஞ்சா எதுவும் வீட்டில் வைத்திருக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.
எனது வீட்டில் கஞ்சா வைத்திருந்ததாக கூறி என்னை வேனுமென்று கைது செய்துள்ளதாகவும் மேற்படி வார உரைகல் பத்திரிகையின் ஆசிரியர் தெரிவித்துள்ளதுடன் திட்டமிட்டு எனது வீட்டில் கஞ்சாவை வைத்து என்னை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேற்படி பத்திரிகையின் ஆசியர் பல முறை தாக்கப்பட்டுள்ளதும் இவருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.