கிழக்கு மாகாண பெண்சாரணிய சங்கம் பிரித்தானியாவின் கோல்ட் கைட்ஸ் பெண் சாரணிய வழிகாட்டுனர்களுடன் இணைந்து இது தொடர்பான செயலமர்வினை மட்டக்களப்பு,கல்லடி விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் நடத்தினர்.
மட்டக்களப்புக்கு வருகைதந்துள்ள பிரித்தானியாவின் புகழ்பூத்த கோல்டன் கைட்ஸ் உறுப்பினர்களினால் இந்த பயிற்சிகள் வழங்கிவைக்கப்பட்டன.
கிழக்கு மாகாண பெண்சாரணிய ஆணையாளர் திருமதி டி.மோகனகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு,கல்குடா,மட்டக்களப்பு மத்தி வலய பெண் சாரணிய ஆணையாளர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது பிரித்தானியாவின் கோல்ட் கைட்ஸ் வனோபா இஸாக் தலைமையிலான ஆஞ்சலா நடாசா,விக்டோரியா,விக்டேன்,பெதான்,அமி ஆகியோர் கொண்ட குழுவினரே இந்த பயிற்சிகளை வழங்கிவந்தனர்.
இந்த பயிற்சி செயலமர்வில் கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக சின்னம் பெற்ற வண்ணத்துப்பூச்சி மாணவர்கள் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.
மூன்று தினங்கள் இடம்பெற்ற இந்த பயிற்சி செயலமர்வில் ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள்,பெண் சாரணிய வழிகாட்டுனர்கள்,சிரேஸ்ட சாரணியர்கள்,சிறு தோழர்,சாரணியர் அனைவரும் இந்த பயிற்சியில் கலந்துகொண்டனர்.
பாடசாலைகளில் ஆரம்ப பிரிவில் ஆங்கில கற்பித்தல் முறையில் செயற்பாடு ரீதியான கற்பித்தல்,விளையாட்டுக்கள்,சாரணியம் ரீதியான அனைத்து பயிற்சிகளும் இதன்போது வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண் சாரணிய வளர்ச்சிக்கும் அதனை கட்டியெழுப்புவதற்கும் கிழக்கு மாகாண பெண் சாரணி சங்கம் அளப்பரிய பணிகளை ஆற்றிவருவது குறிப்பிடத்தக்கது.