திறன் அபிவிருத்தி பயிற்சியை நிறைவுசெய்த பட்டதாரிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களில் 3ஆவது தொகுதியினருக்கான திறன் அபிவிருத்திப் பயிற்சிப்பட்டறை நிறைவுநாள் நிகழ்வும் சான்றிதழ் வழங்கலும் இன்றையதினம் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற இன்றைய நிறைவு நாள் நிகழ்வில், பிரதம அதிதியாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்து கொண்டார்.

அத்துடன், மீள்குடியேற்ற பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன், மீள்குடியேற்ற அதிகார சபைப் பணிப்பாளர் எஸ்.சத்தியவரதன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்களான ஏ.சுதாகரன், எஸ்.முரளிதரன், ஏ.சுதர்சன், உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மாவட்ட திட்டமிடல் செயலக த்தின் ஏற்பாட்டில் கடந்த திங்கட்கிழமை முதல் நடைபெற்ற இப் பயிற்சி நெறியில், 106 பட்டதாரிப் பயிலுனர்கள் கலந்து கொண்டனர்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைக்கப்பட்ட 457 பட்டதாரி பயிலுனர்களிலிருந்து சுயவிருப்பத்தின் அடிப்படையில் 370 பேர் திறன் அபிவிருத்தி பயிற்சி திட்டத்திற்காக எம்பிலிபிட்டிய, மாதுறு ஓயா, மின்னேரியா, சீனன்குடா ஆகிய நான்கு பயிற்சி நிலையங்களில் 02 வாரகால பயிற்சிக்காக கடந்த மே 8ஆம் திகதி முதல் நடைபெற்றிருந்தன.

அதேநேரம், மிகுதியான ஒரு தொகுதியினருக்கு கடந்த மாதம் 13ஆம் திகதிமுதல்  29திகதிகளில் மாதுருஓயாவில் நடைபெற்றிருந்தது. இவை இரண்டிலும் பங்கு பெறாதவர்களே இப் பயிற்சியில் இணைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த தடவைகளில்,கர்ப்பிணித் தாய்மார்கள், இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடைய தாய்மார்கள் மற்றும் சத்திரசிகிச்சைக்கு உட்பட்டவர்கள், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் போன்றவர்கள் பயிற்சிகளை நிறைவு செய்யத்தவறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.