விடுதலைப்புலிகளின் மட்டு -அம்பாறை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த கௌசல்யனின் முகாம் அமைந்திருந்த பகுதியில், புதையல் தோண்டிய சந்தேகத்தில் பொலிஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டவர்களில், தொல்பொருள் திணைக்களத்தின் சிரேஸ்ட தொல்பொருளாளரான சுனேத்திர நலிந்த சில்வா, தொழில்நுட்ப உத்தியோகத்தர் எரந்த மாரம்ப சில்வா, பெண் உதவியாளர் லசித்தா மாலி ரத்நாயக்க, வாகன ஓட்டுனர் அருணா சாந்த ஆகியோரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பைச் சேர்ந்த வீரசேகர, குலோத்துங்க பண்டார, மடுல் சீமையைச் சேர்ந்த சுப்பிரமணியம் புவனேசன் மற்றும் காணிச் சொந்தக்காரர் என்று தெரிவிக்கப்படும் மட்டக்களப்பைச் சேர்ந்த சிவகுரு சற்குணம் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
மட்டக்களப்பு சத்துருக்கொண்டானைச் சேர்ந்த சிவருகு சற்குணம் எனும் ஆசிரியருக்குச் சொந்தமான காணி ஒன்று குழுவினமடு பிரதேசத்தில் இருப்பதாகவும், அந்தப் பத்து ஏக்கர் காணியில் தங்களது நகைகள் உள்ளிட்ட பொருள்கள் யுத்தத்திற்கு முன்னர் வீட்டுடன் இருந்ததாகவும், தற்போது அப் பொருள்கள் எங்கிருக்கின்றன என்பதைக் கண்டறிந்து தரும்படி தொல்பொருள் திணைக்களத்திடம் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு சற்குணம் ஆசிரியரின் நண்பரான ஆட்பதிவுத்திணைக்களத்தில் தொழில் புரியும் வீரசேகர ஊடாக செய்யப்பட்டுள்ளது.
அவரது உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியில், அவரது நண்பர்கள் இருவரும் இணைந்து தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள், சிரேஸ்ட தொல்பொருளாளருடன் இப் பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில் வேறு பிரதேசத்தவர்கள் நடமாட்டத்தினை அவதானித்த பொது மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும், குறிப்பிட்ட தொல்லியலாளர் உட்பட அவரது உதவியாளர்களும் எந்தவித அறிவித்தலும் இன்றியே இந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இருப்பினும், சுயாதீனமாக இவ்வாறான கண்டுபிடிப்பு வேலைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தொல்பொருள் திணைக்களத்தினைச் சேர்ந்தவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், புதையல் தோண்டினார்கள் என்ற குற்றச்சாட்டில் ஏனையவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சில வாரங்களுக்கு முன்னர் இப்பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் ஈடுபட்டதனை பொது மக்கள் அவதானித்ததாகவும் தெரிய வருகிறது.
விடுதலைப்புலிகளின் முகாம்கள் அமைந்திருந்த இடங்கள் பலவற்றில் பெருந்தொகைப் பணங்கள் புதைந்திருப்பதாக தகவல்கள் இருக்கின்றன.
இந்த அடிப்படையில் இவர்கள் இந்த இடத்தில் பணம், நகைகளை எடுத்துக் கொள்வதற்காக இந்த முயற்சியில் இறங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.