விமான நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு வந்தவர்களிடம் மயக்கமருந்துகொடுத்து கொள்ளை

(ரவிச்சந்திரன்)

இந்தியாவில் இருந்து விமானத்தில் இலங்கை சென்ற இரண்டு தமிழர்களை ஏற்றிச் சென்ற வாடகை வாகனத்தின் சாரதி அவர்களுக்கு இடையில் நடுவில் விஷம் கலந்த இளநீரை கொடுத்து, மயக்கமடைய செய்து லட்சக்கணக்கான தங்கம், பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு, அவர்களை வெல்லவ மடகமுவ காட்டில் கொண்டு போட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் சகோதரர்கள் இருவர் கடந்த 18 ஆம் திகதி இரவு கட்டுநாயக்க விமானத்தில் இருந்து வாடகை கார் ஒன்றில் தாம் கொண்டு வந்த பொருட்களுடன் மட்டக்களப்பு நோக்கி புறப்பட்டுள்ளனர்.

இவர்கள் பயணித்து கொண்டிருந்த போது, கிரியுல்ல பிரதேசத்தில் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பபட்டுள்ளதுடன்,  இடைநடுவில் இளநீர் கடையொன்றில்  இளநீர் அருந்திய பின்னர் சகோதரர்கள் மயக்கமடைந்துள்ளனர். இவர்கள் கண்விழித்து பார்த்த போது தாம் காட்டில் இருப்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் மதுபோதையில் விழுந்து கிடப்பதாக காவற்துறையினர் பிடித்து விசாரித்த போதே உண்மை தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்த தங்க ஆபரணங்கள், வெளிநாட்டு பணம், மூன்று பயண பொதிகளுடன் சாரதி தலைமறைவாகியுள்ளார்.

மேலதிக பாதுகாப்புக்காக இவர்கள் வாடகை வாகனத்தில் ஏறும் முன்னர், வண்டியின் சாரதியை தமது கையடக்க தொலைபேசியில் படம்பிடித்துள்ளனர். சாரதி அந்த கையடக்க தொலைபேசியையும் எடுத்து கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

வெல்லவ காவற்துறையினர் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.