மட்டக்களப்பு வாவியில் தடைசெய்யப்பட்ட வலைகள் மீட்பு-ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

மட்டக்களப்பில் சட்ட விரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவான சட்ட விரோத வலைகளும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்;ட கடற்தொழில் நீரியல்வள திணைக்களம் தெரிவித்து.

மட்டக்களப்பு வாவியின் கல்லடி பாலம் தொடக்கம் ஆரையம்பதி மாவிலங்குதுறை வரையான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் தேடுதல் நடவடிகைகளின்போதே இவை கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்;ட கடற்தொழில் நீரியல்வள திணைக்களம் தெரிவித்தது.

மாவட்;ட கடற்தொழில் நீரியல்வள திணைக்கள உதவிப்பணிப்பாளர் தொ.ஜோர்ஜின் ஆலோசனையின் கீழ் மாவட்;ட கடற்தொழில் நீரியல்வள திணைக்கள மாவட்ட கடற்தொழில் பரிசோதகர் ஜே.ஓ.இ.எஸ்.ராஜ்குமார் தலைமையில் சென்ற பரிசோதகர்களான மனோகரன், பரீட் ,அமிர்தலிங்கம்,நிப்ராஸ்,முகமட்,நஜனாத் மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தினை சேர்ந்த பொலிஸார் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 18 தொகுதிகளைக்கொண்ட சுமார் ஆறு இலட்சம் பெறுமதியான வலைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் நீரியல்வள திணைக்கள உதவி பணிப்பாளர் தொ.ஜோர்ஜ் தெரிவித்தார்.

தடைசெய்யப்பட்ட முக்கூட்டுவலை, தங்கூசிவலை, மூன்று இஞ்சிக்கு குறைந்த கண்ணளவுகொண்ட வலைகள் ஆகியவற்றையே கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.

சுட்ட விரோத மீன்பிடியின் காரணமாக மட்டக்களப்பு வாவியில் சிறிய ரக மீன்கள் பிடிக்கப்படுவதால் மீன்களின் பெருக்கம் குறைந்துவருவதன் காரணமாக சட்ட விரோத மீன்பிடியை தடுக்கும் வகையிலான செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக கடற்தொழில் நீரியல்வள திணைக்கள உதவி பணிப்பாளர் தெரிவித்தார்.

இதன் காரணமாக மட்டக்களப்பு வாவியில் உள்ள 128 மீன் இனங்களில் 28 மீன் இனங்கள் அருகிச்சென்றுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடியை ஜீவனோபமாககொண்ட சுமார் 11500 குடும்பங்கள் மீன்பிடியையே நம்பியுள்ளதாகவும் சட்ட விரோத மீன்பிடியினால் அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

2001 கடற்தொழில் நீரியல் வாழ் சட்டத்தின் வாவி சட்டத்தின் முகாமைத்துவ பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டதன் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக உதவிப்பணிப்பாளர் ஜோர்ஜ் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவர்களையும் மீட்கப்பட்ட வலைகளையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.