மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ள மீள்குடியேற்ற கிராமங்களுக்கான மின் விநியோக திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுவருகின்றன.
மகிந்த சிந்தனையின் அனைத்து கிராமங்களையும் ஒளியூட்டுவோம் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட மீள்குடியேற்ற எல்லைக்கிராமமான புதுமுன்மாரிச்சோலைக்கான மின் விநியோகத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் வில்வரெட்னம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
பல தசாப்தகாலமாக மின்சாரத்தினை கண்டிராத இப்பிரதேசம்,மின்சார வசதியில்லாத காரணத்தினால் யானையின் தாக்குதலுக்கும் உள்ளாகிவந்தது.
இந்நிலையில் கடந்த வருடம் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் முரளிதரனிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த மின் இணைப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
ஐந்து கிலோமீற்றர் கொண்ட இந்த மின்இணைப்பானது சுமார் ஒருகோடியே 50இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
இதன் மூலம் இப்பிரதேசத்தினை சேர்ந்த சுமார் 200 குடும்பங்கள் நன்மையடையவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற அதிகாரசபையின் பணிப்பாளர் சத்தியவரதன், களுவாஞ்சிகுடி பிராந்திய மின் அத்தியட்சர் அனுசாந்த்,வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வெலகெதர,மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் பட்டிருப்பு தொகுதி இணைப்பாளர் சித்திரவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.