காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு வேலைத்திட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில்   நேற்று (07.05.2026) வியாழக்கிழமை மாலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் திறன் விருத்தி நிலையத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த அவர்கள் 'ணுழுழுஆ' தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டு வரவேற்புரையை நிகழ்த்தியதுடன், இந்த விழிப்புணர்வு வேலைத்திட்டத்தின் நோக்கத்தையும் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தினார். 

அதனைத் தொடர்ந்து, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் கௌரவ ஹர்ஷன நாணயக்கார அவர்கள் நிகழ்வுக்கு அனுப்பி வைத்திருந்த விசேட செய்தி உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து கௌரவ ஆளுநர் அவர்களின் உரை இடம்பெற்றது.

கௌரவ ஆளுநரின் உரையைத் தொடர்ந்து, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜே.தற்பரன் அவர்களால் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டம் மற்றும் அதன் கட்டளைகள் (மனிதப் புதைகுழிகள் மற்றும் மாவட்ட, பிரதேச செயலாளர்களின் பொறுப்புகள் உள்ளடங்கலாக) தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. 

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக பணிப்பாளர் சபை உறுப்பினர் ரி.யோகராஜா அவர்களால் காணாமல் போனோர் விவகாரம் தொடர்பான புள்ளிவிவரங்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன.

அதன்பின்னர், நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜே.தற்பரன் அவர்களின் நெறிப்படுத்தலில் உத்தியோகத்தர்களுடனான கேள்வி - பதில் அங்கம் இடம்பெற்றது. 

காணாமல் போன ஆட்கள் தொடர்பான கோவைகளின் முன்னேற்றங்களை இற்றைப்படுத்தல் மற்றும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் புதிய கொள்கைக் கட்டமைப்பு குறித்து அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டுவதை நோக்கமாகக் கொண்டு இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலன், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய நான்கு மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலர்கள், மாவட்டப் பிரதிப் பதிவாளர் நாயகங்கள், வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர், சமூகசேவைகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.