“டித்வா புயலின் ஊடாக கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவப் பகிர்வும்” என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல்.

கிளிநொச்சி மாவட்டத்தில் அனர்த்த முன்னாயத்தத்தை வலுப்படுத்தும் நோக்கில் World Vision Lanka நிறுவனத்தின் நிதியுதவியுடன் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் 2025 ஆம் ஆண்டு ஏற்பட்ட “டித்வா” புயலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட கண்டாவளை மற்றும் கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பொது அமைப்புகள் மற்றும் கிராம அலுவலர்களை நோக்கமாகக் கொண்டு இந்த செயலமர்வு ஒழுங்குபடுத்தப்பட்டது.
“டித்வா புயலின் ஊடாக கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவப் பகிர்வும்” என்ற தலைப்பில் நடைபெற்ற இச்செயலமர்வில் அனர்த்தத்தின் போது ஏற்பட்ட சேதங்கள், எதிர் நடவடிக்கைகள் மற்றும் அதிலிருந்து பெறப்பட்ட அனுபவங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற அனர்த்த சூழ்நிலைகளில் மக்கள் எவ்வாறு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) அஜிதா பிரதீபன்,மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் A. அழகக்கோன்,World Vision Lanka மாவட்ட/பிராந்திய முகாமையாளர் யூட் நிசாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
டித்வா புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 15 கிராம அலுவலர் பிரிவுகளும், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 6 கிராம அலுவலர் பிரிவுகளும் உள்ளடக்கப்பட்டு, இச்செயலமர்வு விரிவாக நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.