அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு ஆங்கிலம், இஸ்லாம் பாட நெறிகளுக்கு பயிற்சி பெறுவதற்கான நேர்முகப்பரீட்சை நாளை ஆரம்பம்


அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெறுவதற்காக கல்வி அமைச்சினால் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்ட நிலையில் பயிற்சி ஆசிரியர்களை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு பயிற்சி பெறுவதற்காக நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டது.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்தித்து அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு பயிற்சிக்காக விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு பல அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை தெரிவித்ததுடன், இஸ்லாம் பாட நெறிக்கான பயிற்சி அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் மாத்திரம் நடைபெற்றுக்கொண்டிருக்கத்தக்கதாக இஸ்லாம் பாட ஆசிரியர்களையும் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு நேர்முகப்பரீட்சைக்கு அழைத்திருப்பது தொடர்பாக தனது கவலையைத் தெரிவித்ததுடன் இது தொடர்பாக பாராளுமன்றத்திலும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை உரை நிகழ்த்தினார்.
இந்த விடயம் தொடர்பாக பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்கள் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சியை பெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கினார்.
இதற்கமைவாக கல்வி அமைச்சின் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கான பிரதிப் பணிப்பாளர் E.P.W.M.N.P.வர்ணசூரிய கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நேர்முகப்பரீட்சைக்காக அழைக்கப்பட்ட 34 பயிற்சி ஆசிரியர்களை அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெறுவதற்காக நாளை (24/12/2024) நடைபெறும் நேர்முகப்பரீட்சையில் கலந்து கொள்ளுமாறு பணிப்புரை வழங்கியுள்ளார்.
ஆங்கில மொழிப் பயிற்சிக்காக 27 பயிற்சி ஆசிரியர்களும், இஸ்லாம் பாட பயிற்சிக்காக 07 பயிற்சி ஆசிரியர்களும் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.