திருக்கோவில் ஆதார வைத்தியசாலை ஒரு வாரமாக வைத்திய சேவைகள் இடைநிறுத்தம்-பொதுமக்கள் பாதிப்பு

அம்பாரை திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிபகிஸ்கரிப்பு காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல் எந்தவொரு வைத்திய சேவைகளும் இடம்பெறாது இடை நிறுத்தப்பட்டுள்ளது. நோயாளிகள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் திருக்கோவில் பிரதேச நோயாளிகள் மருத்துவ தேவைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு சென்று வருவதாக விசனம் தெரிவித்துள்ளதுடன் அரச வைத்தியர் சங்கத்தினர் நோயாளிகளின் மீது கருணை கொண்டு மீண்டும் வைத்தியசாலையில் வைத்திய சேவைகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் மற்றும் வைத்தியசாலையின் பாதகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தரிடம் வினவியபோது இதனை அவர்கள் உறுப்படுத்தி இருந்தனர்.

திருக்கோவிலிலில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிர் இழந்ததைத் தொடர்ந்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலை மருத்துவர்களின் அசமந்த போக்கே காரணம் என தெரிவித்து கடந்த திங்கட்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணிவரை பிரதான வீதியினை மறித்து மாணவர்கள் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்ததுடன் வைத்தியசாலையில் பெயர் பலகை மற்றும் வைத்தியசாலையின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்தன.

இதனைத் தொடர்ந்து வைத்தியர்கள் தமக்கு பாதுகாப்பு இல்லையென தெரிவித்து அவர்கள் தொடர்ந்து ஒரு வாரமாக பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருதுடன் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார், திருக்கோவில் வலயக் கல்வி அலுவலம் மற்றும் சுகாதார துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும் இன்றுவரை திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் எந்தவொரு பிரிவிலும் வைத்திய சேவைகள் இடம்பெறவில்லை.

இதன் காரணமாக திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் நம்பியுள்ள ஒரே ஒரு வைத்தியசாலை இதுவாகும். தற்போது வைத்தியசாலை இயங்காத நிலையில் வயோதிபர்கள் சிறுவர்கள் தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சைகளைப் பெற்ற வந்தவர்கள் என அனைவரும் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் பெரும் தொகை பணதத்pனை செலவு செலவு செய்து தொடர்ச்சியாக செல்லமுடியாதுள்ளதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பாப்புக்கடி மற்றும் அவசர நோய் காரணமாக வைத்திசாலைக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் அவர்கள் அனைவரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு மக்களின் உயிர்களுடன் விளையாடாது சம்பந்தப்பட்ட தரப்பினர் துரிதமாக நடவடிக்கைகளைக் முன்னெடுத்து எமக்கான வைத்திச சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு உதவவுமாறு நோயாளிகள் சமூக ஆர்வளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.