நாங்கள் வெற்றிகொள்வோம் - அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு,

 



"இலங்கையை வெற்றிகொள்வோம்" மக்கள் நடமாடும் சேவை திட்டத்தின் மூன்றாம் கட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று (23) கேகாலையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிக்கையில்,

கடந்த 18 மாதங்களில் 8பில்லியன் டொலருக்கும் அதிக பணத்தை அனுப்ப வெளிநாடுகளில் தொழில் புரிந்துவரும் நாட்டு வீரர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.அவர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார். அதனால் வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு தேசத்தின் மரியாதை உரித்தாக வேண்டும்

இன்று எல்லா இடங்களிலும் அனைவரும் எவ்வாறான கட்சி, நிறம் கூட்டணி அமைத்துக்கொண்டு கூக்குரல் இட்டாலும் இந்த நாடு நாட்டில் இரண்டு முகாம்களே இருக்கின்றன. அதில் ஒன்றுதான் எம்மை பலவந்தமாக இழுத்துப்போட்டிருக்கும் படுகுழியில் இருந்து வெளியேற உண்மையாக நடைமுறையில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற முகாம் மற்றது, அந்த நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதென தெரிவித்து பொய்யாக கூச்சலிட்டுக்கொண்டு வெளிநாட்டு சக்திகளிடம் பலியாகி இந்த நாட்டை மேலும் பாதாளத்துக்கும் நெருக்கடிக்கும் இழுத்துச் செல்லும் முகாமாகும்.

தற்போது நாடுபூராகவும் விழா போன்று மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்திக்கொண்டு, நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு காலை வாரும் பிரிவினரும் இருக்கின்றனர்.

இவர்கள் இன்று தெரிவித்த விடயங்களை மக்கள் மறக்க மாட்டார்கள். ஜனாதிபதி சீனாவிடம் பணம் பெற்றே தேர்தலுக்கு பதாதைகள் சுவரொட்டிகள் அடிப்பதாக இற்றைக்கு 10 வருடங்களுக்கு முன்னர் இவர்கள் தெரிவித்திருந்தார்கள். அப்படியானால் இவர்கள் இந்தளவு பதாதை, சுவரொட்டிகளை தொங்கவிடுவது யாரிடமிருந்து பணம் பெற்று என கேட்கிறோம். நாட்டு மக்களுக்கு இதற்கு பதிலளிக்க வேண்டும். நாட்டு மக்களும் இது தொடர்பாக இவர்களிடம் கேள்வி எழுப்ப வேண்டும்.

 மேலும் நாடு வீழ்ச்சியந்தபோது நாட்டை  பாெறுப்பேற்று அதனை பாதுகாக்க முன்வராமல் விரண்டோடியவர்கள் யார். ஆனால் நாங்கள் நாடு நெருப்பெடுக்கும்போது பின்வாங்காமல் அதனை பாதுகாக்க எங்களால் முடிந்த நடவடிக்கையை மேற்கொள்வோம். எமது நாட்டை பாதுகாக்க எங்களால் முடிந்த விடயங்களை நாங்கள் மேற்கொள்வோம். நாட்டை பாதுகாக்க முன்வந்தவர்கள் யார் என்பது நாட்டு மக்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். 

நாங்களும் எமது ஜனாதிபதியும் எங்களை பாதுகாத்துக்கொள்ள தப்பிச்செல்ல வில்லை.

நாட்டை பாதுகாக்க முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். அதுதான் எங்களது ஒரே எதிர்பார்ப்பு எங்களுக்கும் ஜனாதிபதிக்கும் வேறு எந்த மறைமுக நிகழ்சி நிரலும் இல்லை மக்களுக்கு தெரிவிக்க முடியாத எந்த நிகழ்ச்சி நிரலும் எங்களிடம் இல்லை. சமூகவலைத்தளங்களை அடக்கி, மக்களுக்கு மறைக்க எந்த நிகழ்ச்சி நிரலும் எங்களுக்கு இல்லை. நாங்கள் சிங்களம், தமிழ், முஸ்லிம் என பிரித்த எல்லா சந்தர்ப்பத்திலும் எமது நாடு பாதாளத்துக்குள் விழுந்தது. 

 எங்களை மதத்தால் பிரித்தார்கள். இனத்தால் பிரித்தார்கள். அந்த சந்தர்ப்பங்களில் நாங்கள் விழுந்தோம். அதனால் இன,மத பேதங்களை ஒதுக்கிவிட்டு நாங்கள் ஒன்றுபட்டால் இலங்கையை வெற்றிகொள்வோம் என்பது கனவாகப்போவதில்லை என அமைச்சர் தெரிவித்தார்