அகிலன் பவுண்டேசனின் அனுசரணையுடன் பதுளையில் நடைபெற்ற பொங்கல் விழா


இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ் பதுளை மாவட்ட செயலகம் மற்றும் இந்து சமய அபிவிருத்தி பேரவை,இந்துசமயம் சார் நிறுவனங்கள் இணைந்து நடாத்திய மாபெரும் கலாசார பண்பாட்டு பேரணியும் பொங்கல் விழாவும் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இலண்டன் வோள்தஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தின் முழுமையான அனுசரணையுடனும் அகிலன் பவுண்டேசனின் ஏற்பாட்டிலும் இந்த நிகழ்வு இன்று கோலாகலமாக நடைபெற்றது.
பதுளை மாவட்ட செயலகத்திலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்வேறு இந்து சமயம்சார்ந்த கலாசார மற்றும் விழுமியங்களை பேணும் வகையிலான வகையில் கலந்துகொண்டு பேரணியானது ஆரம்பமாகி ஊவா மாகாண நூலக கேட்போர் கூடம் வரையில் நடைபெற்றது.
ஊவா மாகாண நூலகத்திற்கு முன்பாக பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றதுடன் அதனை தொடர்ந்து ஊவா மாகாண நூலக கேட்போர் கூடத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்துக்கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி அநிருதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.பிரபாத் அபயவர்த்தன,திடீர் மரண விசாரணை அதிகாரியும் இலண்டன் அகிலன் பவுண்டேசனின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி வீ.ஆர்.மகேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெற்றதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.