மின்சாரம் வழங்குதல் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குதல் ஆகியவை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப் பட்டுள்ளன.
மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் நேற்று (21) வெளியிட்டார்.
மேலும், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற அதை ஒத்த நிறுவனங்களில் உள்ள நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் பராமரிப்பு உணவு மற்றும் சிகிச்சை தொடர்பாக அனைத்து சேவைகள், வேலை அல்லது உழைப்பு அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடு முழுவதும் பொது அமைதியைப் பேணுமாறு ஆயுதப்படையினருக்கு விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவு (அத்தியாயம் 40) மூலம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, தனக்கு வழங்கப் பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
மேலும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, புத்தளம் கண்டி, மாத்தளை, நுவரெலியா, கிளிநொச்சி, வவுனியா, குருநாகல், அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய நிர்வாக மாவட்டங்களில் பொது அமைதியைப் பேணுவதற்காக இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.