மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரனா பரிசோதனைகள் ஆரம்பம்- பாதுகாப்புடன் நடவடிக்கை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரனா தொற்று கண்டறிவதற்கான பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் க.கலாரஞ்சினி தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் கொரனா தொற்று தொடர்பான பரிசோதனைகள் மற்றும் மருத்துவ நடவடிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு மற்றும் கள விஜயம் இன்று நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தனிப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் கொரனா தொற்று கண்டறிவதற்கான பரிசோதனைகள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டதுடன் அது தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டன.

கொரனா தொடர்பான சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்படுவோரின் மாதிரிகள் இதுவரையில் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டே முடிவுகள் பெறப்பட்டுவந்த நிலையில் தற்போது மட்டக்களப்பில் இதன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

27ஆம் திகதி பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றுவரையில் 143பேர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவர்களில் நான்கு கொரனா தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் க.கலாரஞ்சினி,வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் கே.வைதேகி,பிரதம ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் எம்.எஸ்.எம்.ஷாஹீர்,மயக்கமருந்து,அதிதீவிர சிகிச்சை வைத்திய நிபுணர் டாக்டர் ச.மதனழகன் ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தனர்.

கொரோன பரிசோதனை நிலையமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டிருந்ததினைத் தொடர்ந்து இதற்கான தனி அலகு ஸ்தாபிக்கப்பட்டு, இங்கு வரும் கொரோனா நோயாளர்களை அல்லது கோரோனா நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாமென சந்தேகிக்கும் குணங்குறியுள்ளர்களையும் இப்பிரிவிற்குள் எடுப்பதற்கு பிரத்தியேக வாயல் அமைக்கப்படிருந்தது. தற்போது பீசீஆர் பரிசோதனை மேற்கௌ;வதனையடுத்து இரண்டாவது வகைப்படுத்தல் பிரிவு ஒன்று அவசர மற்றும் விபத்து பிரிவுக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் க.கலாரஞ்சினி தெரிவித்தார்.

தற்போது ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் வேளைகளில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வருகின்ற நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நோயாளர்களுக்காக சமுக இடைவெளி பேணி அமரக்கூடியவாறு மேலதிக ஆசன வசதிகள், கூடாங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கிளினிக் சிகிச்சைக்காக வருபவர்களுக்கான மருந்து விநியோகம் தபால் சேவை மூலம் வழங்கப்பட்டிருப்பதுடன் தற்போது இங்கு வருபவர்கள் இடைவெளிபேணி மருந்துகளைப் பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும் பொதுமக்கள் வீடுகளில் இருந்துகொள்ளுமாறும், அவசிய தேவை ஏற்படின் மாத்திரம் வெளியில் வருமாறும், முகக்கவசம் அணிதல், கைகளை சுகாதார முறைப்படி சவர்க்காரமிட்டு அடிக்கடி கழுவிக் கொள்தல், சமுக இடைவெளியினைப் பேணுதல் போன்ற விடயங்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும் பொதுமக்களைக் அவர் கேட்டுக் கொண்டார்.