அடிப்படை வசதிகள் அற்ற கல்வி நிறுவனங்கள் அனைத்தும் சீல் வைக்கப்படும் : மாநகர முதல்வர் எச்சரிக்கை.

மாணவர்களுக்கு சுவாத்தியமானதும், பாதுகாப்பானதுமான கல்வி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கத்தவறும் உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அவர்களின் கல்வி நிறுவனங்களையும் நிரந்தரமாக மூடப்படும் எனும் கண்டிப்பான உத்தரவினைப் பிறப்பித்துள்ளார் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன்.

தனியார் கல்வி நிலையங்களின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினருக்கும், தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்றைய தினம் (21.11.2019) நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாநகர நிர்வாக எல்லைக்குள் செயற்படுகின்ற தனியார் கல்வி நிறுவனங்களில் நிலவும் சுகாதார சீர்கேடுகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு நிலமைகள் தொடர்பில் பெற்றோராலும் பெண் மாணவிகளாலும் முதல்வருக்கும், மாநகர சபைக்கும் தொடர்ச்சியாக பல முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் மேற்படிக் கலந்துரையாடலானது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக ஆண், பெண் மாணவர்களுக்கு என தனித்தனி மலசலகூட வசதியின்மை, பாதுகாப்பற்ற கொட்டில்களின் அமைப்பு, முறையான கழிவகற்றல் வசதிகள் இன்மை. போதிய காற்றோட்டமின்மை. மாணவர்களுக்கான குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்படாமை, பெண் பிள்ளைகளின் அத்தியவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை மற்றும் வீதி போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் துவிச்சக்கரவண்டித் தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மாநகர முதல்வரால் தனியார் கல்வி நிலைய உரிமையாளர்களுக்குச் சுட்டிக்காட்டப்பட்டன.

அத்துடன் ஏற்கனவே தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலில் பல அடிப்படை வசதி வாய்ப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தும் இது தொடர்பில் பலர் அசமந்தமாக இருப்பதாகவும், இனி வரும் காலங்களில் மாணவர்களுக்கு சுவாத்தியமானதும், பாதுகாப்பானதுமான கல்வி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கத்தவறும் உரிமையாளர்களுக்கு எதிராக மாநகர கட்டளைச் சட்டத்தின் ஊடாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அவர்களின் கல்வி நிறுவனங்களும் நிரந்தரமாக மூடுவதற்குரிய நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மாநகர முதல்வர் கண்டிப்பான உத்தரவினையும் விடுத்தார்.