மட்டக்களப்பில் வீதிக்கு இறங்கி போராட்டம் நடாத்திய முற்போக்கு தமிழர் அமைப்பு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துமாறு கோரி மட்டக்களப்பில் இன்று காலை கவன ஈர்ப்பு பேரணியும் போராட்டமும் நடைபெற்றது.

கல்முனையில் மதத்தலைவர்களினால் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரத போராட்டத்திற்கு இணைவாக இந்த போராட்டம் முற்போக்கு தமிழர்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த மூன்று தினங்களாக மட்டக்களப்பில் சத்தியாக்கிரக போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இன்று காலை இந்த கவன ஈர்ப்பு பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முற்போக்கு தமிழர்கள் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான எஸ்.வியாழேந்திரன் தலைமையில் காந்திபூங்காவில் பேரணி ஆரம்பமாகி மட்டக்களப்பு பஸ் நிலையம் வரையில் சென்று மீண்டும் காந்திபூங்காவினை வந்தடைந்தது.

அதனைத்தொடர்ந்து காந்திபூங்காவில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த நடவடிக்கையெடுக்குமாறு அரசாங்கத்தினை வலிறுத்தும் வகையிலான கோசங்களும் எழுப்பப்பட்டன.

இந்த போராட்டத்தில் முற்போக்கு தமிழர்கள் அமைப்பின் உறுப்பினர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டதுடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தவேண்டும் என்பதான பதாகைகளையும் போராட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.